தென் அமெரிக்கா நாடான சிலியில் மத்திய பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.
கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அங்கு கரும் புகை மண்டலம் ஏற்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் இருளில் சூழ்ந்தது போல் புகை மண்டலம் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் காட்டுத் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறியும் 46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலரது உடல்கள் வீதிகளில் சிதறி கிடந்தன.
தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.