கனடாவின் ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 06 பேர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனுக்கா விக்கிரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினாயனா விக்கிரமசிங்க (2), கெலி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் உயிரிழந்த நிலையில், கணவன் தனுஷ்க விக்கிரமசிங்க (மதுரங்க) கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவர்களது குடும்ப நண்பரான 40 வயதுடைய காமினி என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
19 வயதான Febrio De-Soyza என்ற, கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜையே இந்த கொலையை செய்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார்.
நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு Barrhaven, Ottawa உள்ள பெரிகன் டிரைவில் இருக்கும் ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா பொலிஸார் வியாழக்கிழமை உறுதிப்படுத்தி உள்ளனர்.
புதன்கிழமை இரவு 11 மணிக்கு இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்துள்ள நிலையில், கடைசிக் குழந்தை கனடாவில் பிறந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் 2013 இலிருந்து இவர்கள் வசித்து வந்துள்ளதுடன், அவர்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இலங்கை இளைஞனே இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.