இங்கிலாந்து பிரஜைகள் இருவர், சுவீடனில் காணாமல் போயுள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில், சுவீடன் -மால்மோவில் எரிக்கப்பட்ட காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக சுவீடன் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காணாமல் போன இங்கிலாந்து பிரஜைகளின் சடலம் எனத் தெரியவருகிறது.
மேலும், இவை இரட்டைக் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“ஸ்வீடனில் காணாமல் போன இங்கிலாந்து பிரஜைகள் ஆண்கள் இருவரின் குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். சுவீடன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என சம்பவம் குறித்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்று புதன்கிழமை (17) காலை சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் தடயவியல் சோதனைகள் நடைபெறதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் சோர்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, டென்மார்க்கில் உள்ள விமான நிலையத்தில் இங்கிலாந்து பிரஜை ஒருவர் கறுப்பு நிற பதிவு செய்யப்பட்ட டொயோட்டா ராவ் 4 என்ற காரை வாடகைக்கு எடுத்ததாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுவீடன் -மால்மோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.