கேரள மாநிலத்தின் வயநாட்டில் (Wayanad) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 151 பேராக உயர்நதுள்ளது.
அத்துடன், இந்த மண்சரிவில் இருந்து கிட்டத்தட்ட 1,000 பேரை இந்திய இராணுவத்தினர் மீட்டுள்ளனர் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன பலரை தேடி வருகின்றனர். இன்னும் 187 பேரைக் காணவில்லை என்று மாநில முதலமைச்சர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : கேரளாவில் மண்சரிவு- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு
இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வயநாட்டில் பெய்த கனத்த மழை மண் சரிவிற்கு இட்டுச்சென்றது. 2018ஆம் ஆண்டில் கேரள மாநிலம் எதிர்நோக்கிய கடும் வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஆக மோசமான பேரிடராக தற்போதைய மண்சரிவு கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகே இருக்கும் சூரல்மாலா (Chooralmala) நகரை இணைக்கும் பாலம் மண்சரிவினால் இடிந்தது. அதற்குப் பதிலாக வேறொரு பாலத்தைக் கட்டும் பணிகளில் இந்திய இராணுவம் களம் இறங்கியுள்ளது.