இந்திய பிரஜைகள் இருவர், அமெரிக்கா – வெர்ஜீனியா மாநிலத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
56 வயதுடைய பிரதீப்குமார் பட்டேல் என்பவரும் அவரது மகளுமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், கடந்த 20ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.
தந்தையும் மகளும் அவர்களது உறவினர் ஒருவரின் கடையில் வேலை செய்து வந்துள்ளார்கள் என்றும் கடையில் உயிருக்குப் போராடிய பட்டேல் அங்கேயே உயிரிழந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மகள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் 44 வயதுடைய ஆணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றும் Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.