Microsoft நிறுவனம், அதன் ஊழியர்களின் சுமார் மூன்று சதவீத ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யப்போவதாக அறிவித்தது. அதாவது நிறுவனத்தின் 6,000 பேரை ஆட்குறைப்புச் செய்யப்போவதாக நேற்று அறிவித்தது.
இந்த ஆட்குறைப்பு ஊழியர்களில் Microsoftஇன் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் (AI department) பணிப்பாளர் கேப்ரியலா டி குயிரோஸ் (Gabriela de Queiroz) உள்ளடங்கியுள்ளமை பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் Microsoftஇல் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் பணிப்பாளராக அவர் பணிபுரிந்தார். பல செயற்கை நுண்ணறிவு நடவடிக்கைகளை அவர் வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில், உடனே வேலையை நிறுத்தும்படி தமக்கு உத்தரவு வந்ததை அவர் X தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வேலை இழப்பு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஆட்குறைப்புக்கு ஆளான ஏனைய ஊழியர்களுக்கும் ஆதரவு தெரிவித்தார்.
கேப்ரியலாவின் X பதிவைப் படித்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், “பணிப்பாளர் பதவியில் இருக்கும் ஒருவருக்கே வேலை நிச்சயமில்லையென்றால், ஏனையவர்களின் நிலை அதைவிட மோசமாக இருக்கும்,” என்று பலர் கருத்துரைத்தனர்.
செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்காகவும் Microsoft அந்த நடவடிக்கையை எடுப்பதாக Reuters செய்தி கூறுகிறது.
இதற்குமுன்னர் 2023ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் 10,000 பேரை ஆட்குறைப்புச் செய்தது. மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக அது அமைந்தது.
கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி, Microsoft நிறுவனத்தில் 228,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.