படிப்பு தொடங்கி வேலை, பொழுதுபோக்கு என எல்லா நிலைகளிலும் இன்டர்நெட் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கேம் விளையாடுவது, பாடல் கேட்பது, பள்ளி சிறுவர்கள் ப்ராஜெக்ட் பண்ணுவது, இப்படி நம் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் இன்டர்நெட்டை சார்ந்துதான் இருக்கிறது. ஜெர்மனிக்கு மேற்படிப்பு படிக்கவும் வேலை செய்யவும் வரும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த தகவல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில், ஜெர்மனியில் எந்த இன்டர்நெட் கனெக்க்ஷன் சிறந்தது, எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று பார்ப்போமா?
திருமதி சரஸ்வதி பெரியசாமி அவர்கள் நம்மிடம் கூறும் போது, “இன்டர்நெட் மட்டும், இன்டர்நெட் + போன், இன்டர்நெட் + போன்+ டிவி என மூன்று வகைகளில் நீங்கள் கனெக்க்ஷன் எடுக்கலாம். அதே மாதிரி, நேரடியாக அவர்களின் கடையில், சப் டீலரிடத்தில் அல்லது ஆன்லைனில் என்று மூன்று இடங்களில் விண்ணப்பித்து கனெக்க்ஷன் பெறமுடியும் . எப்படி இருப்பினும் 10 நாள் முதல் ஒரு மாதம் வரையிலும் ஆகும். நான் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது 100 ஈரோ பரிசுக்கூப்பனுடன் கூடிய கனெக்க்ஷன் கிடைத்தது” என்றார்.
1&1, டெலிகாம்( டாய்ச்சடெலிகாம்) , O2, வோடபோன், யூனிட்டி மீடியா என பல இன்டர்நெட் இணைப்பு வழங்கும் கம்பெனிகள் ஜெர்மனியில் உள்ளன. வேகத்தைப் பொருத்தவரையில் 16 Mbps முதல் 100 Mbps வரையிலும் கம்பனிகளுக்கு இன்னும் அதிகமான வேகத்துடனும் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விலையைப்பொறுத்த வரையில் மாதம் ஒன்றுக்கு 12 ஈரோ முதல், 20 ஈரோ, 30 ஈரோ என்று நாம் உபயோகிப்பதற்கேற்ப நீண்டுகொண்டே போகிறது.
முன்னதாக, www.check24.de மற்றும் www.verivox.de போன்ற இணைய தளங்களில் எந்த இன்டர்நெட் கம்பெனி மலிவாகக் கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது. அப்படி பார்க்கும் போது முக்கியமாக ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக, Telekom கம்பெனி, 13 ஈரோவுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதாக போட்டிருக்கிறார்கள் என்றால் அதன் விபரங்கள் முழுவதையும் படித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால், 28 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் என்று போட்டிருப்பார்கள். அல்லது படிப்பவர்களுக்கு மட்டும் என்று இருக்கும். அதனால், முழு விபரத்தையும் படிப்பது மிகவும் நல்லது. எந்த வேகத்தில், எவ்வளவு காலம் இணைப்புத் தேவை என்பதை முடிவு செய்து அதன்பின் provider-ஐத் தேர்வு செய்வது நல்லது.
provider தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. அதாவது, ஜெர்மனியைப் பொறுத்தவரை, அனைத்து வீடுகளிலும் டெலிபோன் பாக்ஸ் ஒன்று இருக்கும் (பொதுவாக, basement-ல்). அதில் பெரும்பாலும் அனைத்து provider-களின் கேபிள் கனைக்ஷனும் செட்டப் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் provider- ரின் டெலிபோன் கேபிள், அந்த டெலிபோன் பாக்ஸில் இல்லை என்றால் நீங்கள் வேறு provider-ருக்கு மாற வேண்டியதுதான். வேலை தேடும் போது நினைத்த வேலை கிடைக்காத பட்சத்தில் கிடைக்கிற வேலையை ஏற்றுக்கொள்கிறோமே அது மாதிரி தான். நம் வீட்டில் எந்த provider -களின் கனெக்ஷன் இருக்கிறது என்பதை அந்தந்த provider-களின் இணையத்தளத்திற்கு சென்று உங்கள் வீட்டின் முகவரியை கொடுக்கும் பட்சத்தில் அது சொல்லிவிடும்.
உதாரணமாக, Telekom கடைக்கு சென்று உங்கள் பாஸ்போர்ட் காட்டி, கனெக்ஷனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் சர்வீஸ் ஆள் ஒருவர் அடுத்த நாள் உங்களுக்கு போன் செய்து, தான் வரும் நாளை உங்களிடம் சொல்வார். அன்றைய நாளில் உங்களின் Apartment -in-charge-ஐ( ஜெர்மன் மொழியில் Hausmeister என்று சொல்வோம்) basement-ல் உள்ள டெலிபோன் பாக்ஸை திறந்து வைக்க சொல்வார்.அப்புறம் என்ன! அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் உங்களுக்கு இணைப்பு கிடைத்து விடும்.
அனைத்து provider-களுமே குறைந்த பட்சம் 2 வருட காண்ட்ராக்ட் போடச் சொல்வார்கள். கவலை வேண்டாம்! இடையில் நீங்கள், இந்தியா திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் கல்லூரியின் / கம்பெனியில் உங்களுக்குக் கொடுத்த கடிதத்தைக் காட்டி உடனடியாக இணைப்பைத் துண்டித்துக்கொள்ளலாம்.
இது போக, வோடபோன் கம்பெனி Gigacube என்ற “Plug and use” என்னும் “சிம்” உதவியுடன் கூடிய இன்டர்நெட் இணைப்பையும் வழங்குகிறது. “சிம்”முடன் கூடிய அந்த உபகரணத்தை பிளக்கில் சொருகினால் போதும். டெலிபோன் கேபிள் தேவையில்லை. மாதம் 25GB முதல் பல நிலைகளில் கிடக்கிறது.
என்ன! ஜெர்மனி புறப்பட்டு விட்டீர்களா!
மாடல்: ‘பேபி’ மிருதுல்யா பிரசன்னா, ஜெர்மனி
ஜேசு ஞானராஜ். ஜெர்மனி