பிரான்சில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நானெட்ஸ் நகரில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயம் உள்ளது. இது பிரான்சின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த தேவாலயத்தில் திடீரென தீ பிடித்தது. தேவாலயத்தின் உள்புறத்தில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்து. இதுபற்றி தகவல் அறிந்ததும் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் பல மணி நேரமாகப் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிகாலை நேரம் என்பதால் தேவாலயத்திற்குள் ஆட்கள் யாருமில்லை. இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
அதேசமயம் இந்த தீவிபத்தில் இந்த பழமை வாய்ந்த தேவாலயத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. தேவாலயத்தில் தீ பிடித்தது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலகப்புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.