காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்வு முடிவதற்குள் மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 16-ம் திகதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த கெடு நாளை வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இதனால், மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும், கர்நாடக சட்டபேரவை தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று 28.03.2018 (புதன்கிழமை) சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிவடைய இன்னும் ஒருநாள் உள்ளது. அதனால், இப்போது எதையும் சொல்ல முடியாது. மத்திய அரசு நிச்சயம் நல்ல முடிவை எடுக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுக்காற்றுக் குழு ஆகியன தொடர்பாக டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உணர்வை உணர்ந்து மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்”
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.