புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றில், அதன் உரிமையாளர் “மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு இல்லை” என்ற வாசகம் அடங்கிய விளம்பரப் பலகையை வைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐங்கரன் காபி பார்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஜொமோட்டோ செயலி மூலம் சமீபத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை, டெலிவரி செய்ய வருபவர் இஸ்லாம் என்பதைத் தெரிந்துகொண்ட அமித் சுக்லா, இஸ்லாம் நபர் வேண்டாம், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை டெலிவரி செய்யச் சொல்லுங்கள் என்று கூறி கோரிக்கை வைத்தார்.
அதற்கு ஜொமோட்டோ நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்துவிட்டு, இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டார். அவருக்குப் பதிலளித்த ஜொமோட்டோ நிறுவனமோ “உணவுக்கு மதமில்லை, நாங்கள் டெலிவரி செய்யும் நபர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை” என்று விளக்கம் அளித்தது. இந்தச் சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில்தான், புதுக்கோட்டையில் ஐங்கரன் என்ற பெயரில் உணவகம் மற்றும் காபி பார் நடத்திவரும் உணவகத்தின் உரிமையாளரான அருண்மொழி “மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு இல்லை” என்ற வாசகத்தை உணவகத்தின் வாசலில் உள்ள விளம்பரப் பலகையில் எழுதிவைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உணவக உரிமையாளருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இது வெறும் விளம்பரம் மட்டுமில்லை. உண்மையாகவே, சாதி, மதம் பார்த்து சாப்பிட வருபவர்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்கிறார் அருண்மொழி.
அவர் கூறும்போது, “காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் அனைத்து மதத்தினரின் பங்களிப்பும் இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக, சாதி மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டதுதான் உணவு. அதில், சாதி, மதம் எல்லாம் பார்ப்பது முட்டாள் தனமானது. மத்தியப்பிரதேசத்தில் நடந்த இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. சாதி, மதம் பார்த்து சாப்பிட வருபவர்களுக்கு நிச்சயம் எனது கடையில் அனுமதி கிடையாது. இதை வலியுறுத்தியே தற்போது விளம்பரப் பலகை வைத்துள்ளேன்’ என்றார்.
எழுதியவர் – மணிமாறன்.இரா. புகைப்படங்கள் – வெங்கடேஷ்.ஆர்