கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. 33 வயதாகும் இவர் சராசரி குடும்பப் பெண்ணாக இருந்து வந்தார்.
ஆனால், பனையேறும் தொழில் செய்து வந்த இவரது கணவர், சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதனால் ஷீபாவின் குடும்பம் வறுமையில் வாடியது.
அதனைத் தொடர்ந்து, தானே கணவரின் தொழிலை செய்ய ஷீபா நினைத்தார். குடும்ப வறுமையை போக்க அவர் தற்போது பனையேறும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவரது முயற்சிக்கு சமூகத்தினர் பல காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போட்டனர்.
எனினும், தொடக்கத்தில் கற்றுக்கொள்ள சிரமமாக இருந்த இந்த தொழிலை, தொடர் விடா முயற்சியால் கற்றுக் கொண்டார். தனது வளர்ப்பு நாயுடன் விளைநிலங்களுக்கு செல்லும் ஷீபா, நாளொன்றுக்கு ரூ.350 வரை சம்பாதித்து வருகிறார்.
அத்துடன் உயரத்தை பொருட்படுத்தாமல் தென்னை, ரப்பர் மரங்களிலும் ஏறி தனக்கு கொடுக்கப்படும் பணிகளை செய்து வருகிறார். தற்போது ஷீபாவை பலரும் கள் இறக்கு பணிக்கு அழைக்கின்றனர். மேலும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பெண்கள் இத்தகைய வேலைகளை செய்வது சாதாரணமானதல்ல. இருந்தும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் ஷீபா தனது வேலையை செய்து, உலகம் எங்கும் புகழ்பெற்று வருகின்றார்.