மத்தியப் பிரதேசம், நீமுச் மாவட்டத்தில் உள்ள கோ ஆபரேட்டிவ் வங்கியில் 10 வயது சிறுவன் முப்பதே வினாடிகளில் 10 லட்சம் ரூபாயைத் திருடிக்கொண்டு, எந்தவித தடயமும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்ற வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
வழக்கம் போல, காலை 11 மணிக்குப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கோஆபரேட்டிவ் வங்கி. அப்போது, கந்தல் ஆடையுடன் வங்கிக்குள் நுழைகிறான் 10 வயது சிறுவன். வாடிக்கையாளர்கள் பலர் வரிசையாக நின்றுகொண்டிருக்க, கேஷியரின் அறைக்குள் சென்றவன் அவன் பாட்டுக்கு பத்து லட்சம் ரூபாயை எடுத்துச் செல்கிறான். வங்கி காவலர்களும் ஊழியர்களும் நிறைந்த இடத்தில் பணத்துடன் நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
வாடிக்கையாளர்களும் வங்கி அலுவலர்களும் சூழ்ந்த இடத்தில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சிறுவன் மீது யாருக்கும், எந்த சந்தேகமும் எழவில்லை. பணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே சென்ற போது, எக்சிட் சோதனைக் கருவியில் எழுந்த அலாரத்தால் காவலர்கள் அவனை விரட்டிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து மறைந்துவிட்டான்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறார்கள் காவல் அதிகாரிகள். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீமுச் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர், “அந்த சிறுவன் மிகவும் குட்டையாக இருந்ததால் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.
இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பின்னால் பெரிய கும்பல் ஒன்றின் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பல குற்றச் சம்பவங்களை சமூக விரோதிகள் நடத்துகிறார்கள். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.