0
கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.
கோவையைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் கோவை ஞானி. கி.பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். 1935ல் பிறந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர்.
கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததுடன், தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்து கீழை மார்க்சியத்தைப் படைத்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை கோவை ஞானி எழுதியுள்ளதோடு, தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
கண்பார்வை குறைந்த போதும் அனைத்து நூல்களையும் பிறர் துணையுடன் வாசித்து விடும் பழக்கம் கொண்டவர் கோவை ஞானி. தவறுகள் நடக்கும் போது அறச்சீற்றத்துடன் அவற்றை விமர்சிப்பவர். நிகழ் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததுடன் பல்வேறு இலக்கியக் குழுக்களையும் உருவாக்கி அதை வழிநடத்தியவர் கோவை ஞானி.
ஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார். புலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.
வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். கோவை ஞானிக்கு பாரிவள்ளல், மாதவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கோவை ஞானியின் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.