பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பிரிவினைவாத அமைப்பான காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி உள்ளிட்ட மூன்று அமைப்புகள் சார்பில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
குறித்த மனுவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, லெப்டினன்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் ஆகியோரிடம் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகும்படி காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணிக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால்இ விசாரணைக்கு அந்த அமைப்பினர் ஆஜராகவில்லை.
பின்னர் அக்டோபர் 6 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் உத்தரவிடப்பட்டது. அப்போதும் அந்த அமைப்பிலிருந்து யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே வழக்கைத் தள்ளுபடி செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.