புதுடெல்லி: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் 2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மூன்றாவது ஆண்டுக்கான இந்த விருதுகளை ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லியில் அறிவித்தார்.
இதில், ஒட்டு மொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ராஜஸ்தான் மாநிலமும், மூன்றாவது இடத்தை தமிழகமும் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு 6 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த கிராம பஞ்சாயத்து (தென்மண்டலம்) பிரிவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் பஞ்சாயத்து 2ம் இடத்தை பிடித்துள்ளது. சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சி மூன்றாவது இடமும், சிறந்த பள்ளிகள் பிரிவில் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தமிழ்நாடு 2ம் இடத்தையும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா 2ம் இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கான விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.