இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸ் பாதித்து பலியாகினர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கியது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களில் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்தனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதிலும் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோழிக்கோட்டில் நிபா தொற்று பாதிப்பு இல்லாமல் இயல்புநிலை திரும்பியிருக்கிறது. இதனால் கல்வி நிலையங்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் இன்று திறக்கப்படவில்லை. அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒன்லைனில் வகுப்புகள் நடந்தன.
இந்த நிபா வைரஸினால் இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லையென இலங்கை அரசு அறிவித்துள்ளது.