புலம்பெயர் தமிழர் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட லங்காசிறி ஊடக நிறுவனத்தை ஐ பி சி தமிழ் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியா நிறுவனம் நேற்றையதினம் வாங்கியுள்ளது. ஊடகப் பரப்பில் வெளிவராத செய்தியை பிரித்தானிய கம்பெனி பதிவாளர் அலுவலக இணையத்தளம் மூலம் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது. சுமார் நான்கு மில்லியன் பவுன்களை ஐ பி சி தமிழ் நிறுவனம் செலுத்தியதாக உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.
2009 ம் ஆண்டின் பின்னர் புலம்பெயர் தமிழர் மத்தியில் தமக்கென ஒரு இடத்தினை வைத்திருந்த லங்காசிறி நிறுவனம் தமிழ்வின், மனிதன், ஜே வி பி நியூஸ், கல்லறை மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட இணையத்தளங்களைக் கொண்ட குழுமமாக இயங்கிவருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக அசுர வளர்ச்சி நோக்கி பயணிக்கும் ஐ பி சி தமிழ் தற்போது லங்காசிறியின் அனைத்து இணையத்தளங்களையும் தமது நிறுவனத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது. தற்போது இலங்கை யாழ்ப்பாணத்தில் தனது புதிய கலையகத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை மற்றும் புலம் பெயர் மேலை நாடுகளிலும் தமிழ் ஊடகத்துறையில் ஐ பி சி தமிழ் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.