செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நினைவின் நிழல்கள் | சிறுகதை | விமல் பரம்

நினைவின் நிழல்கள் | சிறுகதை | விமல் பரம்

10 minutes read

கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அனைவரும் ஒன்று கூடியிருந்தோம். ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் இந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கின்றேன். இன்றுடன் என் வேலையிலிருந்து விலகுவதால் பிரியாவிடை தந்து அனுப்புவதற்காக ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்தோஷமாக ஏற்பாடு செய்திருந்தாலும் அனைவரின் முகங்களிலும் கவலை தெரிந்தது.

இரண்டு கிழமைக்கு முன் வேலையை விடுவதாகச் சொல்லி என் ராஜினாமா கடிதத்தை மனேஜரிடம் கொடுத்தபோது அவரும் முதல் ஒத்துக்கொள்ளவில்லை.

“குழந்தை பிறந்தால் உங்களுக்கு ஆறுமாத லீவு இருக்கும். வேலையை விடத்தேவையில்லை. பிறகு பார்த்து முடிவு எடுக்கலாம்” என்றார்.

“நான் தான் குழந்தையைப் பார்க்கவேணும். கஷ்டம் சேர்” என்றேன்.

“ஓகே. பிறகு உங்கட விருப்பம்” என்றபடி கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். என்னோடு வேலை செய்பவர்களைச் சமாளிக்கவும் திணறினேன். அனைவரும் ஓரே குடும்பமாய் பழகி வந்ததால் யாரும் இதை எதிர்பார்க்கவுமில்லை விரும்பவுமில்லை. தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

“நல்லவேலை, நல்ல சம்பளம். நீயும் பாஸ்கரும் இங்க வேலை செய்யிறதால ஒண்டாய் வாறீங்கள் போறீங்கள் எவ்வளவு வசதி. யோசிச்சு முடிவு எடு. பிறகு கவலைப்படாதே” என்றாள் கீதா.

“பாஸ்கர், நீங்கள் சொல்லக்கூடாதா. இரண்டு பேரும் வேலை செய்தால் வசதியாய் இருக்கலாம். ஏன் வேலையை விடவேணும். குழந்தையுள்ள நாங்களும் தானே வேலை
செய்யுறம்” என்றாள் ரேகா.

“வாணி என்னட்ட முதல் கேட்டது குழந்தை பிறந்த பிறகு வேலைக்குப் போக விருப்பமில்லை எண்டு. அவளின்ர முதல் விருப்பத்தை நான் மறுக்கமாட்டன்” என்று சொன்னார் பாஸ்கர்.

அவர்களுடன் ஐந்து வருடங்கள் ஒன்றாக வேலை செய்த எனக்கு, அனைவரும் சேர்ந்து பிரியாவிடை தந்து அனுப்பும் போது மனம் பாரமாயிருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. நான் நினைத்தபடி வேலையை விட்டாச்சு. அது நிம்மதியைத்தந்தது.

அலுவலகத்திலிருந்து இருபது நிமிட தூரத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்த போது பம்பலபிட்டியிருக்கும் அம்மா வந்து காத்திருந்தாள்.

“எப்பம்மா வந்தீங்கள். அப்பா, பாட்டி எப்பிடியிருக்கினம்” அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.

“எல்லாரும் சுகம். பாட்டிக்கு எப்பவும் உன்ர நினைவுதான். குழந்தை பிறந்திட்டுதா… எப்ப பிறக்கும் எண்டு கேட்டபடி. ஒருக்கா வந்து பார்த்திட்டுப் போவன். ஏன் லேட்டாய் வாறீங்கள்” என்று கேட்டாள்.
”வேலையை விட்டிட்டன். பார்ட்டி நடந்தது. அதுதான் லேட்” என்றேன்.

“எட்டு மாதம் முடிஞ்சுது. லீவு எடுத்து வீட்டில நில்லு எண்டு சொல்ல வந்தால் வேலையை விட்டுட்டு வந்து நிக்கிறாய்” என்று சொன்ன அம்மாவைக் கோபத்துடன் பார்த்தேன்.

“குழந்தை பிறந்தால் வேலையை விடுவன் எண்டு உங்களுக்குச் சொன்னனான் தானே” என்றேன்.

“சொன்னாலும் உனக்குப் பிடிச்ச நல்ல வேலையை விட்டிட்டு வருவாய் எண்டு நான் நினைக்கேல. குழந்தை பிறந்தால் ஆறுமாத லீவோட பிறகும் லீவு எடுத்து ஒரு வருசம் நிக்கலாம். ஏன் அவசரப்பட்டு வேலையை விட்டனி. நானும் இருக்கிறன் பார்த்துக் கொள்ளுவன்” என்றாள் அம்மா.

“என்னையே பார்க்கேல. என்ர பிள்ளையைப் பார்க்கப் போறீங்களே” பட்டென்று நான் சொன்னதும் அம்மாவின் முகம் மாறி விட்டது.

“ஏன் பழசுகளை மனசில வைச்சுக் கதைக்கிறாய். உதுகளையெல்லாம் விட்டிட்டு சந்தோஷமாய் இரு. வயித்தில இருக்கிற பிள்ளைக்கு அதுதான் நல்லது“ என்றாள் அம்மா.

நானும் இந்த நேரங்களில் சந்தோஷமாகயிருக்க வேண்டுமென்று தான் நினைப்பேன். ஆனால் என் சின்னவயதில் ஆழமாய் பதிந்த கசப்பான நினைவுகள் சிலசமயங்களில் என்னை அறியாமல் வார்த்தையாய் வெளிப்பட்டு விடும்.

“மனம் நோக ஏன் கதைக்கிறாய். வேண்டாம் வாணி” என்றார் பாஸ்கர்.

“எத்தனை தடவை சொன்னாலும் கேக்கிறதில்லை. தானும் கவலைப்பட்டு என்னையும் நோகவைக்கிறாள். வளர்ந்தாப்பிறகு என்ர நிலமையை புரிஞ்சு கொள்ளுவாள் எண்டு நினைச்சன்” அம்மா மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“அதைத்தானே நானும் கேக்கிறன். விபரம் தெரியிற நேரத்தில பாட்டியோட விட்டிருக்கலாம். உங்கட நிலமை புரிஞ்சு நானும் இருந்திருப்பன். சின்னவயசில கொண்டுபோய் விட்டிட்டீங்களே. அம்மா ஆரெண்டு தெரியாமலே பாட்டியோட இருந்திருக்கிறன். உங்களுக்கு நேரமிருக்கிறபோது வருவீங்கள், தூக்கி நான்தாண்டா அம்மா எண்டு கொஞ்சுவீங்கள். இரண்டாம் நாள் போயிடுவீங்கள். உங்களைத் தேடி காணேல எண்டு அழுதுகொண்டேயிருப்பன். நீங்கள் அடிக்கடி வந்திட்டுப் போறதால தான் நான் அழுகிறன் எண்டு பாட்டி உங்களை வரவேண்டாம் எண்டு சொல்ல நீங்களும் கொஞ்சநாள் வராமல் நிண்டிட்டீங்கள். ஆசையாய் தூக்கிக் கொஞ்சிற முகத்தைக் காணேல எண்டு எத்தனை நாள் தேடியிருப்பன். வளர வளர உங்களை விட்டிட்டிருக்கிறதை நினைச்சு எத்தனை நாள் ஏங்கியிருக்கிறன். அந்த ஏக்கம்தான் உங்களிட்ட வந்தபிறகும் என்னை விட்டு போகாமலேயிருக்கு” என்றேன்.

“வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில உன்னைவிட்டிட்டு போகவும் உதவியில்லை. பாட்டியைக் கூப்பிடலாமெண்டால் தாத்தா வீட்டை விட்டு வர சம்மதிக்கேல. பாட்டி தான் பார்க்கிறன் எண்டு ஊருக்கு கூட்டிக்கொண்டு போனா. நானும் உன்னை விட்டிட்டு இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டன் எண்டு எனக்குத்தான் தெரியும். என்ன செய்யிறது. பாட்டி உன்னைப் பார்த்தது எங்களுக்கும் உதவியாயிருந்தது” என்றாள் அம்மா.

“எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்தது. பாட்டி என்னோட பாசமாயிருந்தாலும் கண்டிப்பு காட்டி வளர்க்கிறன் எண்டு ஒரு இடமும் விடுறதில்ல. அதுகளோட சேராதே, இதுகளோட சேராதே எண்டு மற்றவையோட விளையாடவும் விடுறதில்ல. மாமியாக்களும் ஆசையாய் தூக்கிவைச்சு கொஞ்சிறதுமில்லை. ஆசைப்பட்டு ஏதாவது கேட்டால் பத்துத்தரம் யோசிச்சு பத்தில ஒண்டைத்தானே பாட்டி வாங்கித்தாறது”

“நாங்கள் உனக்கு விருப்பமானதை வாங்கித் தரேலேயே”

“எல்லாம் வாங்கித்தாறனீங்களே. உங்களுக்கு நினைவிருக்கே, எட்டு வயசில பக்கத்து வீட்டு பாலு சின்ன சைக்கிள் வைச்சு ஓடுறதைப் பார்த்து எனக்கும் வேணுமெண்டு கேக்க அப்பா ஓமெண்டு சொன்னதுக்கு பாட்டி பெடியன் றோட்டில ஓடுது. இவளுக்கு வேண்டாம் எண்டு சொன்னவுடன நீங்களும் விட்டிட்டீங்கள். அதை நினைச்சு எத்தனை நாள் அழுதிருப்பன். பிறகு டான்ஸ் பழக எவ்வளவு ஆசைப்பட்டன். பாட்டி விடவேயில்லையே. டான்ஸ் பழகி ஆடப்போறியே. சங்கீதம் படி. கடவுளுக்கு முன்னால நாலு தேவாரத்தை ராகத்தோட படிக்க புண்ணியம் கிடைக்கும் எண்டா. சில விஷயங்களை மறக்கவே ஏலாதம்மா” என்றேன் மூச்சு வாங்க.

“இதை எத்தனை தடவை சொல்லுவாய். பாட்டிக்கு எப்பவும் உன்னில பாசம்தானேடா. இப்ப நடக்கேலாமல் படுக்கையில இருந்தாலும் அடிக்கடி உன்னைப்பற்றி கேட்டுக்கொண்டிருப்பா”

“எனக்குத் தெரியும். போனமுறை பாட்டியைப் பார்க்க வந்த போது என்ர பிள்ளைக்கு டான்ஸ் பழக்குவன் பாட்டி எண்டு சொல்ல காலம் மாறிப்போச்சு. நாங்களும் மாறத்தானே வேணும். உனக்கு என்ன விருப்பமோ அதைச்செய் எண்டு சொன்னா” என்றேன்.

“பிறகு ஏன் பழசுகளை நினைச்சுக் கவலைப்படுறாய்”

“காலம் மாறினாலும் சின்னவயசில நான் பட்ட வேதனை, ஏக்கம் மாறாதுதானே. அதை என்ர பிள்ளை அனுபவிக்க விடமாட்டன். நினைவு தெரிஞ்ச நாளிலயிருந்து எப்பம்மா என்னோட இருக்கப் போறீங்கள் என்று எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன். உங்களிட்ட வந்தபிறகும் என்ர ஆசை நிறைவேறவேயில்லை. இப்ப எல்லாவற்றையும் மறந்திடு எண்டால் எப்படி மறக்கிறது“ என்றேன்.

“உன்னை மாத்தவே ஏலாது. எப்பதான் உணருவாயோ. சரி, நான் இரவைக்கு ஏதாவது சமைச்சுவைச்சிட்டுப் போறன்” என்றபடி எழுந்து சமையலறைக்குள் போனாள்.

அம்மாவும் பாவம்தான். திருமணத்துக்கு முன் வறுமை. பின் பொறுப்பு. பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் வாழ்நாளெல்லாம் அவர்களுக்காக சந்தோஷமாக உழைத்திருக்கிறாள்.

“பெரிய குடும்பத்தில பொறுப்பு இருக்கு எண்டு தெரிஞ்சு எப்பிடி அப்பாவைச் செய்ய ஓமெண்டு சொன்னீங்கள்“ என்று ஒருநாள் அம்மாவைக் கேட்டேன்.
“சீதனமில்லாமல் பொம்பிளை கேட்டு வந்ததே எங்களுக்குப் பெரிய சந்தோஷம். வந்துகுடும்பத்தைப் பார்க்க வேணுமெண்டு பாட்டி சொன்னா. குடும்பத்துக்குள்ள வந்தால் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கத்தானே வேணும்” என்றாள் அம்மா.

“இல்லையம்மா. பாட்டி கெட்டிக்காரி. அஞ்சு தங்கச்சிமாரோட பிறந்த தன்ர மூத்தமகனுக்கு பொறுப்பாய் ஒருத்தி வரவேணுமெண்டு தேடியலைஞ்சு முற்பது வயசு வரைக்கும் வீட்டிலிருந்த உங்களை சீதனம் இல்லாமல் கொண்டுவந்திருக்கிறா. ஏன் தெரியுமே” என்றேன்.

அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

“வாங்கினால் அதை ஒரு பிள்ளைக்குக் குடுத்து கலியாணம் செய்து வைக்கலாம். மற்றவையை என்ன செய்யிறது. வாங்காவிட்டால் தானே நீங்கள் நித்தமும் உழைச்சுக் குடுப்பியள்” என்றேன்.

அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது.

“வாயை மூடு. என்ன கதைக்கிறாய். நான் ஆருக்கோ செய்தனானே. உன்ர அப்பான்ர சகோதரங்களுக்குத் தானே. கலியாணம் செய்து கொழும்புக்கு வந்தபிறகு படிக்க ஆசைப்பட்டு வசதியில்லாமல் விட்ட படிப்பை தொடர்ந்து படிக்கவைச்சு, கொம்பியூட்டர் படிச்சு இண்டைக்கு நான் என்ர திறமைகளை வளர்த்து நிக்கிறதுக்கு காரணம் அப்பாதானே. அவற்ர சுமைகளை நானும் பகிரத்தானே வேணும்” என்றாள்.

“அதுக்காக என்னை அழ விட்டிட்டுப்போனனீங்கள்தானே. நான் அப்பிடித்தான் கதைப்பன்” என்று அழுகையோடு சொன்னேன்.

“உன்னை பாட்டியோட விட்டாலும் அடிக்கடி உன்னைப் பார்க்க ஊருக்கு வருவம், லீவு நாட்களில நீ இங்க வந்து நிற்பாய். சந்தோஷமாய் இருந்தாலும் திரும்பிப் போகேக்க அழுகிறாய் எண்டு தாத்தா போனபிறகு எல்லாரும் இங்க வந்து ஒண்டாயிருக்கிறம். பிறகு என்ன கவலை உனக்கு” என்றாள் அம்மா.

எனக்கு மனம் ஆறவில்லை. அம்மாவிடம் நான் மட்டும் வரவில்லையே. நாலு மாமிக்கு ஊரில்
திருமணம் நடந்தபின் கடைசி லதாமாமியும் பாட்டியும் என்னோடு வந்தார்கள். அம்மா,அப்பாவிடம் வந்த சந்தோஷமிருந்தாலும் திரும்பவும் பாட்டியோடிருக்கும் உணர்வுதான் எனக்கு. காலை ஆறுமணிக்கு அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போய்விடுவார்கள். என்னைப் பாட்டிதான் ஆயத்தம் செய்து ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு திரும்பி வரும்போதும் வந்து காத்திருந்து வீட்டுக்கு அழைத்து வருவா. அம்மா திரும்பிவர மாலை ஆறுமணியாகிவிடும். இதற்காகவே அம்மாவுடன் பலமுறை சண்டை போட்டிருக்கிறேன்.

“ஸ்கூலுக்கு போறநேரமும் வாறநேரமும் நீங்கள் நிக்கிறேல. நான் வரும்போது நீங்கள் நில்லுங்கோம்மா. இங்க வந்தபிறகு ஸ்கூலுக்குப் போகவே பயமாயிருக்கு. புதிசாய் வந்ததெண்டு என்னோட ஒருத்தரும் கதைக்கிறேல. படிக்கிற பாடம் விளங்கேல எண்டு ஒருத்தரிட்டையும் கேட்கேலாது. எனக்கு அங்க தனிய இருக்கிறமாதிரியிருக்கு” சொல்லும்போதே அழுகை வரும்.

“ஒரே ஸ்கூலில படிக்கமுடியுமே. வளர வேற ஸ்கூலுக்கும் போய் படிக்கத் தானே வேணும். முதல் அப்பிடித்தான் இருக்கும். போகப்போக பழகிடும்” அம்மா சொன்னது உண்மையென்றாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

“முதலே இங்க படிக்கவிட்டிருந்தால் எனக்கு பயமிருக்காது. நிறைய ப்ரண்ஸ் கிடைச்சிருப்பினம். உங்களால தான் எனக்கு கஷ்டம்” அழுகையோடு கோபமும் வரும்.

“அழுகிறாயெண்டு இங்க வந்தால் பிறகும் ஏன் அழுகிறாய். உனக்கு அம்மா குடுக்கிற செல்லம்” பாட்டிக்குக் கோபம் வந்துவிடும்.

இங்கு வந்தபின்பு எனக்குத் தேவையானதை அம்மா செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.

“வேலையால களைச்சு வருவாள். நான் இருக்கிறன் உன்னைப் பார்ப்பன்” என்று சொல்லும் பாட்டியிடம் எதுவும் எதிர்த்து சொல்லமுடியாது. லதாமாமி ஊரிலிருக்கும் போதே, ஏன் எந்த நேரமும் அம்மாவை நினைச்சு அழுதுகொண்டிருக்கிறாய் என்று பேசிக்கொண்டிருப்பா. இப்பொழுது அழுதால் கோபம் வந்து கத்திக்கொண்டிருப்பா. நாட்கள் போகப் போக மாமியின் குணமும் மாறிவிட்டது. ஒரு பிரபலமான புடவைக்கடையில் வேலை கிடைத்தபின் பார்வையில் அலட்சியமும் திமிரும் தெரிந்தது. அந்த திமிரை அம்மாவிடம் காட்டும்போது இவர்களுக்காகத்தானே அம்மா என்னை விட்டிட்டு வேலைக்கு போனா என்று கோபம் வரும். ஆனால் அம்மா ஒன்றும் சொல்லமாட்டாள். என்னையும் பேசாமல் இரு என்று அதட்டிவிடுவாள்.

“நீங்கள் பேசாமல் இருக்கிறதால தான் மாமி மனம் நோக கதைக்கிறா. நீங்கள்
வேலைக்குப் போகாமல் எப்ப என்னோட இருப்பீங்கள்” அம்மாவைப் பார்த்து கேட்பேன்.

“காசுப் பிரச்சனையிருக்கே. பிள்ளைகளிருக்கிற எத்தனை பேர் வேலைக்குப் போகினம். உன்னை மாதிரி எல்லாரும் அழுது கொண்டிருக்கினமே. உன்னோட தானே இருக்கிறன். சந்தோஷமாய் இரு”

“முதலே என்னோட இருந்திருக்கலாம். மாமின்ர கலியாணம் நடக்கும் வரைக்கும் நீங்கள் வேலையை விடமாட்டீங்கள். பிறகு வேலைக்குப் போகாமல் என்னோட இருக்கோணும்”

இங்கு வந்தபின் எத்தனை பொருத்தம் பார்த்தாச்சு. ஒன்றுமே மாமிக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பா. ஒருவழியாக எனக்கு பதினைந்து வயதிருக்கும் போது லதாமாமியின் திருமணம் சரி வந்தது. உடனே வீட்டில் பிரச்சனையும் தொடங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டுக்காரர் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் என்று எதுவும் கேட்கவில்லை. அப்பா, அம்மாவுக்கு பெரும் ஆறுதலாகயிருந்தது. ஊரிலுள்ள வீட்டையும், மற்ற மாமியாட்களுக்கு கொடுத்தது போல் இருபது பவுன் நகையும் லதாமாமிக்கு கொடுக்கவேணுமென்று பாட்டி சொல்லிக்கொண்டிருந்தா.

“பழைய வீடு வேண்டாம். வித்துப்போட்டு இங்க வீடு வாங்கிப் தாங்கோ” மாமி கேட்டா.

“கொழும்பில ஒரு வீடு வாங்க ஏலுமே. ஊரில இருக்கிற வீட்ட வித்தாலும் காணாது. அதைத்தாறம். பிறகு உங்கட விருப்பப்படி வித்துப்போட்டு காசைப்போட்டு வாங்குங்கோ” அப்பா சொன்னார்.

“எனக்கு அந்தவீடு தாறதெண்டால் வடிவாய்த்திருத்தி புது வீடு மாதிரித்தரவேணும். அக்காவைக்கு அஞ்சு வருசத்துக்கு முதல் குடுத்த இருபது பவுனே எனக்கும் இப்ப தரப் போறீங்கள். எனக்கு வாங்கிற நகை எனக்குப்பிடிச்சதாய் இருக்கவேணும். நான் கீறிவைச்சிருக்கிற டிசைன் மாதிரித்தான் எனக்கு வேணும்”

மாமி ஒரு பேப்பரைக் கொண்டுவந்து காட்டினா. அதில் தோகை விரித்த மயில் பதக்கத்தில் இரட்டைச்சங்கிலி கோர்த்திருந்தது. அதே டிசைனில் நெக்லஸும், தோடும், அதோடு நடுவில் கொடிப்பூக்களோடு வளைந்து செல்லும் அகலமான வளையலும் கீறியிருந்தா.

“இருவது பவுனில இந்தளவும் செய்யலாமே, பேப்பர் முட்டக் கீறியிருக்கிறாய்” என்று கேட்டா பாட்டி.

“நகைக்கடையில கேட்டனான் முப்பதுக்கு கிட்ட வருமெண்டு சொன்னவ. எனக்கு இதுதான் வேணும்” பிடிவாதமாய்ச் சொன்னா மாமி.

“வீட்டுநிலமை தெரியாமல் கதைக்கிறாய். எங்களுக்கு ஏலுமானதைத்தானே செய்யலாம். ஊரில கலியாணம் நடந்தால் செலவு குறைவாயிருக்கும். இங்கதான் நடக்கவேணும் எண்டு சொல்லுறாய். வீட்டையும் திருத்தவேணும், நகையும் கூடவேணுமெண்டால் செலவுக்கு அவன் எங்க போறது. ஏற்கனவே வேண்டின கடனில மூழ்கிப் போயிருக்குதுகள். எல்லாரையும் அவன்தான் பார்க்கவேணுமெண்டால் என்ன செய்வான். சீதனம் வேண்டாம் எண்டு சொன்னாலும் நீ வேணுமெண்டு நிக்கிறியேடி” பாட்டி சமாதானப்படுத்தும் குரலில் சொன்னா.

“அப்ப சீதனம் வேண்டாம் எண்டு அவையள் சொன்னா அண்ணி ஒண்டுமில்லாமல் வந்தமாதிரி என்னையும் வெறுங்கையோட போகச்சொல்லுறீங்களோ” மாமி பெருங்குரலில் கோபத்துடன் கத்தினாள்.
பக்கத்து மேசையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நான் இதைக்கேட்டு துடித்துக்கொண்டு எழுந்தேன். இவர்களுக்காக நாங்கள் இழந்த சந்தோஷங்கள் எத்தனை. அம்மாவைச் சொல்ல எப்பிடி மனம் வந்தது. ஆத்திரத்துடன் மாமியின் பக்கம் திரும்பினேன்.

‘பளார்’ என்ற சத்தம் கேட்டது. மாமியின் முன் பத்திரகாளி போல் நின்றிருந்தாள் பாட்டி.

“என்னடி சொன்னாய். அண்ணியின்ர மனம் நோக ஒரு சொல்லு நான் சொன்னதில்லை. அவளால தானே உங்களுக்கெல்லாம் இந்த வாழ்வு கிடைச்சிருக்கு. இருக்கிறதை தாறம் எண்டு சொல்ல இன்னும் வேணுமெண்டால் எங்க போறது. இப்ப சொல்லுறன் இவ்வளவு தான். இதுக்கு மேல வேணுமெண்டால் நீயும் உழைக்கிறாய். தேவையானதை வாங்கு. அதுக்குப் பிறகு கலியாணத்தை வைக்கலாம். இப்ப உள்ள போ” ஓரே மூச்சில் சொல்லிவிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தாள் பாட்டி. அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அம்மா உள்ளே போவது தெரிந்தது.

அதன்பிறகு வந்த நாட்களில் அம்மா ஒன்றும் நடக்காதமாதிரி சந்தோஷமாக எல்லாவேலைகளயும் செய்துகொண்டிருந்தாள். நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. படித்துமுடித்து வீட்டிலிருந்த போதும் அம்மா வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். எனக்கு வேலை கிடைத்து போகும்போதும் அம்மா ஆறுமணிக்கு போக நான் எட்டுமணிக்குப் போய் நாலரைக்கு வந்துவிடுவேன். பாட்டிதான் காத்துக்கொண்டிருப்பாள். அம்மாவுக்காக மனம் ஏங்கும்.

“இரண்டு வருசத்தில பென்ஷன் எடுத்திடுவன். அதுக்குப்பிறகு உன்னோடதான்” என்று அம்மா

சொல்லிக்கொண்டிருந்தாலும் எங்கள் திருமணம் நடந்த பின் தான் அம்மாவுக்கு பென்ஷன் கிடைத்தது. அம்மா பிடிவாதமாய் வேலைக்கு ஏன் போனாளென்று என் திருமணத்தின்போது தெரிந்துகொண்டேன்.
நாங்கள் விரும்பிச்செய்ததால் சீதனம் வேண்டவே வேண்டாம் என்று பாஸ்கர் சொல்லிவிட்டார். நானும் வேண்டாம் என்று சொல்லியும் அம்மா கேட்கவில்லை.

“வந்த நாளில இருந்து உழைக்கிறன். உனக்கும் தந்தால்தான் எனக்கு சந்தோஷம். பிறகு உன்னைப் பார்த்து ஒருத்தரும் கேள்வி கேக்கக்கூடாது” என்று சொன்னாள்.
அம்மாவின் நொந்த மனம் தெரிந்தது. என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

“கவலையே இல்லாதமாதிரி சந்தோஷமாயிருந்தீங்களே” என்றேன்.

“எல்லாத்தையும் மனசில வைச்சிருந்தால் எங்கட நிம்மதி போயிடும். பிள்ளைகளை விட்டிட்டு எல்லாரும் விரும்பி வேலைக்குப் போறதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையும், தேவைகளும் அவங்களை அந்த இடத்துக்கு தள்ளி விடுது. அதை நாங்க மனசார ஏற்றுக்கொண்டால் எங்கட வாழ்க்கையும் சந்தோஷமாயிருக்கும். நிம்மதியாயிருக்கத்தானே இவ்வளவு கஷ்டப்படுறம். நீயும் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாயிரடா” என்னை அணைத்தபடி சொன்னாள் அம்மா.

என்மனம் சமாதானமானாலும் குழந்தை பிறந்தபின் வேலைக்குப் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து இன்று நிறைவேற்றிவிட்டேன். மனம் முழுவதும் குழந்தையின் நினைவு எழுந்தது. நான் ஆசைப்பட்டபடி குறையில்லாமல் என் அணைப்பில் வளர்க்கவேண்டும். நினைக்கும்போது சந்தோஷ அலை மனம் முழுவதும் பரவியது.

சமையலை முடித்துவிட்டு வீட்டுக்குப் போக ஆயத்தமாக வந்தாள் அம்மா.

“விரும்பினபடி வேலையை விட்டிட்டாய். இனி குழந்தைப்பற்றி மட்டும் நினை. பாட்டி பார்த்துக்கொண்டிருப்பா. நான் போட்டுவாறன். நீங்களும் வந்திட்டுப் போங்கோ” என்றாள்.

“வாற திங்கட்கிழமை வேலை விஷயமாய் கண்டிக்குப் போகவேணும். வர இரவாகும். வாணியை கொண்டுவந்து விட்டிட்டுப் போறன் மாமி” என்றார் பாஸ்கர்.

திங்கட்கிழமை என்னை அம்மா வீட்டில் விட்டுவிட்டு கண்டிக்குப் போனார். பாட்டியோடிருந்து கதைத்துக்கொண்டிருந்தேன். ஒருமணியிருக்கும் தொலைபேசி சத்தம் கேட்டு அம்மா வந்து எடுத்த அடுத்த நிமிடம் ‘கடவுளே’ என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

“எப்ப நடந்தது, எங்க நடந்தது, இப்ப எங்கயிருக்கிறார்” என்ற அலறல் கேட்டது.

“என்னம்மா, என்ன நடந்தது, ஆர் போனில. சொல்லுங்கோம்மா “ என்றேன் படபடப்பாக. சொல்வதா வேண்டாமா என்று அம்மா ஒருகணம் தடுமாறினாள். அடுத்த நிமிடம் அழுதுகொண்டே பாய்ந்து வந்து என்னை அணைத்துக்கொண்டாள்.

“பாஸ்கர் போன கார் அக்ஸிடெண்டாம். அதில போன இரண்டுபேரையும் கொழும்பு கொஸ்பிற்றலில சேர்த்திருக்காம்” என்றாள் அம்மா.

“ஐயோ” என்று நெஞ்சு பதற கத்தினேன் அதேசமயம் அடி வயிற்றிலிருந்து எழுந்த வலி உடலெல்லாம் பரவி கண்களை இருட்டாக்க என்னை அணைத்துக்கொண்டிருந்த அம்மாவின் கைகளில் மயங்கி விழுந்தேன்.

ஆறுமாதங்கள் பறந்தோடிவிட்டது. ஆறுமாதங்களுக்கு முன் எந்த அலுவலகத்தில் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினேனோ அந்த அலுவலகத்தினுள் நுழைந்தேன். வேலை நேரத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கால்களை இழந்த பாஸ்கரின் வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். அவரின் அணைப்பில் குழந்தையை விட்டு விட்டு, பாஸ்கருக்காகவும் என் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் வேலை செய்யவதற்கு பாஸ்கரின் இடத்தில் வந்து அமர்ந்தேன்.

‘பிள்ளைகளை விட்டிட்டு எல்லாரும் விரும்பி வேலைக்குப் போறதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையும் தேவைகளும் அவங்களை அந்த இடத்துக்கு தள்ளி விடுது. அதை நாங்க மனசார ஏற்றுக்கொண்டால் எங்கட வாழ்க்கையும் சந்தோஷமாயிருக்கும்’

அம்மாவின் குரல் காதில் ஒலித்தது. கண்களில் துளிர்த்த நீரை உள் வாங்கியபடி உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் என் வேலையை ஆரம்பித்தேன்.
நிறைவு..

 

நன்றி : விமல் பரம் – அவுஸ்திரேலியா | தினக்குரல் பத்திரிகை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More