செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சங்ககால சமையல் – தினை சோறு மட்டன் வறுவல் | பகுதி 4 | பிரியா பாஸ்கர்

சங்ககால சமையல் – தினை சோறு மட்டன் வறுவல் | பகுதி 4 | பிரியா பாஸ்கர்

2 minutes read

தினை சோறு மட்டன் வறுவல்

 

ப்ரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு,

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்,

என்ற பாடல் வரிகள் மலைபடுகடாமில் (168-169) உள்ளது.

சங்க இலக்கியத்தில் மலைபடுகடாம் பத்துப்பாட்டில் ஒன்றாகும். 583 வரிகள் கொண்டது. கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பர்.

நன்னனின் சவ்வாது மலையில் வாழ்ந்த முல்லை நில மக்கள் தினைச் சோறும் அதனுடன் நெய்யில் வெந்த பருத்த இறைச்சியையும் நன்கு வதக்கி உண்ண கொடுப்பார்களாம்.

அம்மலை மக்கள் நன்னன் பெயரைக் கூறிக் கொண்டு வீட்டிற்கு வருபவற்கு, வீட்டிலுள்ளோர் அவரை நன்கு வரவேற்று தினை சோற்றுடன் நெய்யில் வதக்கிய இறைச்சியை உண்ண கொடுப்பார்களாம்.

சங்க காலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இந்தச் சுவையான தினை சோறு மட்டன் வறுவலை எவ்வாறு செய்து ருசித்திருப்பார்கள் எனப் பார்ப்போம். இங்கு இறைச்சி என்பது ஆட்டுக்கறியாகும்.

 

தேவையான பொருட்கள் :

 

தினை

-100கிராம்

உப்பு

-தேவையான அளவு

பொடித்த மிளகு

– தேவையான அளவு

மட்டன்

– 200கிராம்

நெய்

– 100மி.லி.

மஞ்சள்தூள்

– ½ டீஸ்பூன்

இஞ்சி விழுது

-3 டீஸ்பூன்

கறிவேப்பிலை

– சிறிதளவு

தண்ணீர்

– தேவையான அளவு

கடுகு

-1டீஸ்பூன்

 

செய்முறை :

கடாயில் நெய் சேர்த்து, சூடானதும் கடுகு, இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். கூடவே கழுவி சுத்தம் செய்த எலும்பில்லாத மட்டன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்காது, மட்டனை நெய்யிலே வதக்கி அதனுடன் பொடித்த மிளகு, மஞ்சள்தூள்  கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.

அடுப்பைச் சிம்மில் வைத்து உப்புச் சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்து மட்டனை வேக வைக்கவும்.

தனியே தினையை உரலில் இடித்து, தவுடைப் புடைத்து கொள்ளவும். போதுமானத் தண்ணீரைச் சேர்த்து தினையை வேக வைக்கவும். நன்கு வெந்த மட்டனுடன் தினை சோற்றைச் சேர்த்து நன்கு பிரட்டி உண்ண வேண்டும். சுவையோ சுவையாக இருக்கும்.

 

குறிப்பு :

தினையைப் புடைக்காமல் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். டிபார்மெண்ட் ஸ்டோர்களில் தவிடு நீக்கிய தினை பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

நம் தேவைக்கேற்ப மட்டனைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள தினையில் இனிப்புச் சத்து ஏதுமில்லை. சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு தினை ஏற்றது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் தினையில் உள்ளன.

சங்க காலத்தில் வெண்ணெய் நெய்யைச் சமையிலில் அதிகம் பயன்படுத்தினர்.

சங்க காலத்தில் சத்தான இறைச்சிக்காகவே ஆடு, கோழி பன்றியை வளர்த்தனர். இயற்கை உணவை உண்டு கொழுத்திருந்தது. ஆனால் தற்காலத்தில் அப்படியில்லை. வெறும் ருசிக்கே தற்காலத்தில் நாம் மாமிசத்தை உண்கிறோம்.

சங்க காலத்தில் பச்சைமிளகாய், வரமிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி கிடையாது. மிளகையே சமையலில் பயன்படுத்தினர்.

 

தொடரும்…

 

 சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்

 

முன்னைய பகுதிகள்:

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-1-07-22-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-2-07-27-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-3-09-27-19/

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More