தற்போது ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பேரிடர் நிலமையில் நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பகுதி, பகுதியாக அமுல்படுத்தப்பட்டும், தளர்த்தப்பட்டும் வரும் நிலையில் ஊரடங்கு தளர்வு காலப்பகுதியில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பில் மிக இறுக்கமான நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட, ஆனையிறவுக்கு மேற்பகுதிகளான இயக்கச்சி முதல் முகமாலை வரையான பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிளிநொச்சி நகர பகுதியையே நாட வேண்டிய தேவை உள்ளது. மிக முக்கியமாக கிளிநொச்சி பொது மருத்துவமனை, மொத்த விற்பனை நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பல அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக அப்பகுதிமக்கள் கிளிநொச்சி நகருக்கு வரவேண்டியது அத்தியாவசியமானதாகும்.
பச்சிலைப்பள்ளி பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருப்பினும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ எல்லைக்குட்பட்ட பிரதேசமாக உள்ளதால் ஆனையிறவில் காணப்படும் இராணுவ சோதனைச்சாவடியைத் தாண்டி அப்பகுதி மக்கள் கிளிநொச்சி நகரப் பகுதிக்குள் பிரவேசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அரசின் கட்டளைப்படி மாவட்ட எல்லைகளுக்கிடையிலான போக்குவரத்தே இடைநிறுத்தப் பட்டுள்ள நிலையில் இராணுவ எல்லைகளுக்கிடையிலான போக்குவரத்துத் தடை விதிப்பால் மிகக்கூடியளவான நெருக்கீடுகளை எதிர்கொண்டுவரும் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கையை மிகவிரைவாக மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டுமென தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி,
சி.சிறீதரன்.
மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.
படிகள் :
1. கௌரவ.ஆளுநர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம்
2. கௌரவ.தவிசாளர், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை, பளை
3. பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், பச்சிலைப்பள்ளி