13 வது திருத்த சட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி என்ற வகையில் அதனை வரவேற்கின்றேன்.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு சிறுபான்மை மக்களுக்கு இலங்கையில் இருக்கின்ற உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இணையத்தின் ஊடாக இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த இராதாகிருஸ்ணன்,
இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் மூலமாகவே இந்த 13வது திருத்த சட்டம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் உருவாக்கப்பட்டது. விசேடமாக இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் அவர்களுடைய அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டே இந்த 13வது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் சிறுபான்மை மக்களுடைய பல்வேறு விடயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக எங்களுடைய கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன கடந்த 30 வருடங்களுக்குள் குறிப்பிடக்கூடிய அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது.
நான் மூன்று முறை மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்தவன் என்ற வகையில் மாகாண சபை ஊடாக கல்விக்கு பாரிய அபிவிருத்தியை செய்யக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மலையக கல்வி அபிவிருத்தி அடைந்து வருகின்றதென்றால் அன்று மாகாண சபைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திகள் காரணமாகவே இன்றைய நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.
அதே போல வடகிழக்கிலும் இவ்வாறான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறையில் இருந்த வாரே பிள்ளையான் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவர் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் அங்கு மேற்கொண்ட அபிவிருத்திகளே. எனவே 13வது திருத்த சட்டத்தை இன்னும் வலுப்படுத்தி சிறுபான்மை மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சிறுபான்மை மக்களுடைய பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு சிறந்த உதாரணமாக மலேசியா சிங்கப்பூர் இந்த இரண்டு நாடுகளை குறிப்பிட முடியும். அண்மையில் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதலாவது இணைய வழி கலந்துரையாடல் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிங்கப்பூர் மலேசியா நாட்டின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு அந்த அரசாங்கம் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது என்பதை சுட்டடிக்காட்டினார்கள்.
இதன் மூலம் அந்த நாட்டின் அபிவிருத்தியிலும் சிறுபான்மை மக்கள் பாரிய பங்களிப்பை செய்து வருவதையும் அவர்கள் இதன்போது தெரிவித்தார்கள்.
இலங்கையின் சார்பாக நானும் கலந்து கொண்டு இலங்கை சிறுபான்மை மக்கள் சார்பாக வெளிநாடுகளில் வாழுகின்ற மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் விசேடமாக இந்தியா இந்த 13வது திருத்த சட்டம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
எனவே எதிர்காலத்தில் உலக தமிழ் பாராளுமன்ற அமைப்பின் ஊடாக அனைவரும் இணைந்து பல அபிவிருத்திகளை செய்வதற்கும் நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.