பேருவளை, மாகல்கந்த, அம்பல்பல மீன்பிடித் துறைமுக கடல் பிதேசத்தில் நீராடச் சென்ற 17, 19 வயதுகளுடைய மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மு.ப. 11.30 மணியளவில் குறித்த பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களும், திடீரென கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் இருவர், பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து காப்பாற்றப்பட்டுள்ளதோடு மற்றைய இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். மற்றையநபர் அங்கிருந்து களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றைய இளைஞர் ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர்கள், உறவினர்களான பிரபாத் கௌசல்ய, சலன தில்ஷான் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த இளைஞர்களின் சடலங்கள் பேருவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.