“நாட்டுக்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடிய சிறந்த தலைவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அக்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில் ராஜபக்சவா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிறந்த தலைவர்கள் உள்ளனர். நீங்கள் பஸில் ராஜபக்சவைப் பற்றி கேட்கின்றீர்கள் எனில், நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய சிறந்த – பொருத்தமான தலைவர் அவர்.
பஸில் ராஜபக்ச போர்க் காலத்தில் சர்வதேச ஆதரவைப் பெற்றுத் தந்தவர். போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர். இவ்வாறு தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அவருக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை போலியானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளன.
இப்படியான தகுதியான தலைவர்கள் எமது கட்சி வசம் உள்ளனர்.” – என்றார்.