சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது.
எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார்.