புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் ஆலோசனை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் ஆலோசனை

1 minutes read

நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (22) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வருடம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது.

இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸார் உட்பட முப்படையினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இது ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. இந்த விடயம் அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கூட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மறுத்திருந்தார்கள். தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை  அதிகூடிய வாக்குகளை வழங்கியுள்ளமையானது மீண்டும் தமிழர் தேசம் ஜனநாயக ரீதியில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அந்த வகையில், புதிதாக ஆட்சியை அமைத்திருக்கின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகள் ஏதும் விதிக்காது எமது உரிமைகளை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மாவீரர் நாள் நினைவேந்தல் தினத்தை காரணம் காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக நிதி சேகரித்து வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி உதவி செய்ய விரும்புவோர் வெளிப்படையான எமது கணக்கிலக்கத்துக்கு உதவி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More