வாஷிங்டன்: டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் விடுபட இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு இருந்த டிரம்பின் வீடியோவை நீக்கி, அவரது சானலுக்கு யூ-டியூப் நிறுவனமும் தற்காலிக தடை விதித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதுடன், அவர் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின. அதன்பின்னர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல்,டிரம்பின் பதிவுகள் கலவரத்தைத் தூண்டுவதாகக் கூறி அவரது கணக்கை பேஸ்புக் காலவரையில்லாமல் முடக்கியிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் டிரம்ப் தன்னுடைய யூ-டியூப் சானலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோ தங்களது கொள்கைகள், விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி யூ-டியூப் நிறுவனமும் Donald j.Trump என்ற டிரம்பின் சானலை தற்காலிகமாக தடை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோவையும் நீக்கியுள்ளது. இந்தத் தடையானது இன்னும் ஒரு வார காலம் நீடிக்கலாம் என நிறுவனம் விளக்கமளித்துள்ளது.