யாழ். மருத்துவபீட பி.சி.ஆர் ஆய்வுக்கூடம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலான காலமாக வடமாகாணத்தின் பிசிஆர் மாதிரிகளை பரிசோதனை செய்யும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் நோய்த் தொற்று குறைவாகக் காணப்பட்ட காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவான மாதிரிகளை ஆய்வு கூடத்தில் பரிசோதிக்க முடிந்த போதிலும் தற்போது நிலவுகின்ற அதிகரித்த தொற்று நிலைமை காரணமாக நாளாந்தம் செய்யப்பட வேண்டிய பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் எமது ஆய்வுக் கூடத்தில் இருந்த உபகரணங்களின் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமை காரணமாக நம்மால் மேலதிக மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. நாட்டில் இயங்கிவரும் ஏனைய ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தானியங்கி கரு அமில பிரித்தெடுப்பு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் மேலதிகமான மாதிரிகளை பரிசோதனைகளை பரிசோதிப்பது தடங்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்படி இயந்திரங்களை பெற்று தருமாறு பல தரப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் நமக்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் எமது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் சுவிஸ் நாட்டில் இருக்கும் கொடையாளர் சுப்ரமணியம் கதிர்காமநாதன் (SKT நாதன் கடை உரிமையாளர்) அவர்களுடன் எம்மை இணைப்பை ஏற்படுத்தி எமது தற்போதைய நிலைமையை விளக்கிக் கூறினார்.
நமது தேவையை உணர்ந்து கொண்ட கொடையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அவ் இயந்திரத்தை பெற்றுத் தருவதற்கான முழு பொறுப்பையும் தானாக முன்வந்து முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். நமக்கு உறுதியளித்தபடி இயந்திரத்தை மிகவும் சொற்ப காலத்தில் நமது ஆய்வு கூடத்துக்கு பெற்றுக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மிக விரைவாக மேற்கொண்டார்.
அதன் பயனாக மேற்படி இயந்திரமானது மிகக்குறுகிய காலத்தில் எமது ஆய்வு கூடத்தை வந்தடைந்தது. கொடையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் வழங்கிய
5 மில்லியன் பெருமதியான இந்த இயந்திரமானது 30 நிமிடங்களில் 48 மாதிரிகளின் கரு அமிலத்தை தன் இயக்கிய முறையில் பிரித்தெடுக்கும் ஆற்றல் மிக்கது. சுவிஸ்லாந்து சூரிச் நகர் எஸ்.கே.ரி வாணிப உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் இந்த உபகரணங்களை எமக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்.
இவ் உபகரணம் மூலம் மேலும் பலருக்கு விரைவாக கொரோனா பரிசோதனையை செய்வதன் மூலம் எமது உறவுகளை காக்க முடியும் என்பதில் ஐயமில்லை. காலத்தின் தேவை கருதி கொடையாளர் திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன.