தண்டலை மயில்கள் சாக
தாமரைக் குளங்கள் காய
கொண்டலும் பயிர்கள் வாழக்
கொடுத்தநீர் குறைந்து போக
வண்டிகள் சுமக்க வாரி
வழங்கிய வயல்கள் இன்று
அண்டிய உழவன் வீட்டு
அடுப்புபோல் காய்ந்த தம்மா!
கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு
கரைமரம் நிறைந்த ஏரி
கட்டிட மனைகள் ஆச்சு
உரைதிணை மருதம் இங்கு
உருத்தெரி யாமல் போச்சு!
நெற்களம் மட்டைப் பந்தின்
நேர்திடல் ஆன திங்கே
புற்களைச் சுமந்த பூமி
புதுப்புது நோய்க்குள் ளானாள்
சொற்களால் பெருமை யன்றி
சோகமே உழவன் சொத்து
தற்கொலை மூன்று போகம்
தவறாமல் விளையு தம்மா!
விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்
மலர்ந்திடும் அணு ஒப் பந்தம்
மாறிடும் நூறு ஆட்சி
உலர்ந்திடும் மருதம் கண்டு
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!
நன்றி: தமிழ் கூடல் | பாவலர் வையவன்