அடிப்படைவாதம் மற்றும் அதனோடு இணைந்த வன்முறை எமது யுகத்தில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரதூரமான சவாலாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மற்றும் அவர்களது நோக்கம் எதுவாயினும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நிலையான அவதானிப்பு அவசியமாகுமென்றும்பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியான சூழல் மதம், இனம் மற்றும் கலாசாரம் என்ற ரீதியாய் வேறுபடுவதில்லை. அது முழு மனித தொடர்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்றிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் வாழ்வாதாரத்தை ஆரம்பிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவத் துறை மூலம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ள தடுப்பூசி மற்றும் ஏனைய பாதுகாப்பு உலகம் முழுவதும் காணப்பட்டாலும் குறைந்த வருமானமுள்ள நாடுகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் மற்றும் பலமான பொருளாதாரமுள்ள நாடுகள் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வழிமுறை வகுக்கப்படவேண்டும். இதில் சிலர் மட்டுமன்றி அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கமானது கல்விக்கு முக்கியத்துவமளித்து இளைஞர்களுக்கு திருப்திகரமான வாழ்வாதார வழிமுறைகளை நிலைநாட்டுவதில் முக்கியத்துவமளித்து செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இத்தாலியின் பொலொக்ஞா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் ஜி.20 சர்வதேச கலாசார மற்றும் மதங்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்: குறிப்பாக எமது நாடான இலங்கை மற்றும் தெற்காசிய பூகோள வலயத்திற்கு இந்த மாநாட்டின் தொனிப்பொருள் நெருங்கிய தொடர்பு உள்ளதால் மாநாட்டில் உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சிக்குரியது.
எவ்வாறாயினும் இந்த மாற்றத்துடனான எழுச்சி, அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து, முதிர்ச்சியடைந்த உணர்வுகளை கட்டியெழுப்பும் சவால்களுக்கு நாம் பதிலளித்துள்ளோம்.
எமது பொருளாதார,அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை யதார்த்தமாக்குவதற்கு தேவையான ஒன்றிணைப்பையும் ஒத்துழைப்பையும் நாம் ஒரு இனம் என்ற ரீதியில் கட்டி எழுப்பியுள்ள நிலையில் எமது எதிர்காலம் அதில் தங்கியுள்ளது.