“தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, இன்று ஒரு பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு. இது எமது நிலத்தை மட்டுமன்றி எமது இருப்பு, அடையாளம் ஆகியவற்றையும் இல்லாமல் செய்யும் அபாயகரமான நிலையை அடைந்திருக்கின்றது. படையினர், திணைக்களத்தினர், புத்த பிக்குகள் போன்ற பலரின் ஒருமித்த செயற்பாட்டுடன் இந்த நில ஆக்கிரமிப்பு நடந்தேறி வருகின்றது” எனத் தெரிவித்திருக்கின்றார் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்.
தாய் நிலம் ஆவணப்படம்
கேள்வி:
தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதை வெளிப்படுத்தும் “தாய் நிலம்” என்ற ஆவணப்பட வெளியீட்டை கடந்த வாரம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தீர்கள். இன்றைய கால கட்டத்தில் இது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது?
பதில்:
மக்களின் துன்பங்கள், துயரங்கள், மனித உரிமை மீறல்களை வெளி உலகத்துக்கு கொண்டுசெல்வதிலும், உண்மையை வெளிப்படுத்தி சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக் கதவுகளைத் திறக்க வைப்பதிலும் ஆவணப் படங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, இன்று ஒரு பெருந்தொற்றாக மாறியிருக்கிறது. இது எமது நிலத்தை மட்டுமன்றி எமது இருப்பு, அடையாளம் ஆகியவற்றையும் இல்லாமல் செய்யும் அபாயகரமான நிலையை அடைந்திருக்கின்றது.
படையினர், திணைக்களத்தினர், புத்த பிக்குகள் போன்ற பலரின் ஒருமித்த செயற்பாட்டுடன் இந்த நில ஆக்கிரமிப்பு நடந்தேறி வருகின்றது. உள்ளூர் தமிழ் மக்கள் பலருக்குக் கூட இது பற்றி சரியான புரிந்துணர்வு இல்லை. அதனால் தான் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இந்த தாய் நிலம்” என்ற ஆவணப்பட வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தோம். மிகவும் நம்பகத் தன்மையான முறையில் சர்வதேச தரத்துக்கு அமைவாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் இந்த தாய் நிலம்” என்ற ஆவணப் படம் தாக்கத்தை செலுத்தும் என்று நம்புகின்றேன். பொது மக்கள் பலர் கூட இப்படி எல்லாம் நடக்கின்றது என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தொலைபேசியில் எடுத்துக் கூறினார்கள். இந்த ஆவணப்படம் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
மன்னார், கிளிநொச்சி மற்றும் வடக்கு -கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் கூட பெரும் அளவில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவற்றை ஆய்வு செய்து உண்மையான தகவல்கள், புள்ளிவிபரங்கள் போன்றன திரட்டப்பட்டு மேலும் இதுபோன்ற தாய் நிலம்” என்ற ஆவணப் படங்களை வெளிக் கொண்டுவர இருக்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் கண்ணால் காண்பவற்றிற்குத்தான் மவுசு அதிகம். வெறும் செய்திகளிலும் பார்க்க கண்ணால் பார்க்கும் விடயங்களையே மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால்தான் இந்த ஆவணப் படம் முக்கியத்துவம் பெறுகின்றது.
அத்துடன் பிரத்தியட்சமாக சில விடயங்களைக் காட்டும் போது, அரசாங்கம் மூடி மெழுகி விடமுடியாது. இவை எல்லாம் பொய் என்று மட்டும் கூறுவார்கள். அது மக்களிடையே எடுபடாது. இதன் தாக்கம் இப்பொழுதே உணரக் கூடியதாக உள்ளது. எப்போதோ ஒளிபரப்பிய எனது சிங்கள மொழி TV கலந்துரையாடல் ஒன்று சம்பந்தமாக தெமட்டகொட குற்றத்தடுப்பு பொலிஸ் தமது பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள். இருந்து பார்ப்போம்.
கேள்வி:
வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்கள். பார்வையாளர்களாகவும் வந்திருந்தார்கள். இலங்கையில் இடம்பெறும் காணி அபகரிப்பு குறித்து அவர்களுடைய கருத்து என்ன?
பதில்:
இது ஒரு கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறல் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பாலஸ்தீனத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இஸ்ரேலுடன் இலங்கையை ஒப்பிட்டு அவர்கள் பேசியுள்ளனர். இரு நாடுகளிலும் இன ரீதியான ஆட்சி முறைகள் (Ethnocratic regimes) நடைபெறுகின்றன என்று கூறினார்கள்.
சர்வதேச மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ் மக்கள் பல்வேறு விதங்களில் தொடர்ந்து போராட வேண்டும் என்பதும், இந்தப் போராட்டங்கள் நிச்சயம் பலாபலன்களைக் கொண்டுவரும் என்பதும் அவர்கள் கூறியுள்ள சுருக்கமான செய்தி. இன ரீதியான ஒரு அரசாங்கம் இலங்கையில் நிலை கொண்டுள்ளது என்று சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்ற இஸ்ரேலிய பேராசிரியர் ஒருவர் கூறியமை ஒரு முக்கியமான செய்தி. அதுவும் ஒரு இஸ்ரேலியப் பிரஜை இஸ்ரேலையும், இலங்கையையும் ஒப்பிட்டு இரு நாடுகளும் இனஞ் சார்ந்த அரசாட்சியை நடத்துகின்றனர் என்று கூறுவது நாம் இதுகாறும் கூறி வந்த இனஅழிப்பு விடயத்திற்கு வலுவூட்டுகின்றது.
எம்முள் ஒரு சில அரசியல்வாதிகள் அது எப்படி இனஅழிப்பு பற்றிப் பேசலாம். அதனை நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள். இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கையில் நடைபெறுவது இன ரீதியான அரசாட்சியே என்று கூறப்படுகின்றது. இப்பொழுதாவது தமிழர்க்கு நடப்பவை பற்றி மத்திய அரசாங்கங்களுக்குச் சார்பாக நொண்டிச் சாட்டுகள் கூறுபவர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி:
மாகாண சபைகள் காணி அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய நிலை இருந்திருந்தால், இந்த நிலையைப் பெருமளவுக்குத் தவிர்த்திருக்கக்கூடியதாக இருந்திருக்கும் எனக் கருதுகின்றீர்களா?
பதில்:
நிச்சயமாக! நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் பல நில அபகரிப்புக்களைக் கட்டுப்படுத்தினேன். மேலும் எம்மிடம் சில அதிகாரங்கள் உள்ளன என்று அறிந்தால், நில அபகரிப்பாளர்கள் எமது நிலங்களை அபகரிக்கத் தயங்குவார்கள். தற்போது மாகாணசபையைச் செயலிழக்கச் செய்வது விட்டு அரசாங்கமும் அரசாங்க அடிவருடிகளும் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு உச்ச நீதிமன்றம் கூட துணை போயுள்ளதாக அறிகின்றேன். அதாவது மாகாணம் செயலிழந்தால், அதன் செயற்பாடுகளை மத்திய அரசாங்கம் செய்யலாம் என்ற பொருள்பட தீர்ப்பொன்று அண்மையில் வெளிவந்ததாக அறிகின்றேன். மத்தியின் பிழையை அல்லது தவறை மத்தியே தனக்கு சாதகமாக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் இடமளித்துள்ளது என்று அறிகின்றேன். விபரங்கள் இன்னமும் என்னை வந்து சேரவில்லை. ஆனால் இந்தக் கூற்று உண்மை.
கேள்வி:
காணி அபகரிப்பு, தமிழ் மக்களின் இருப்பு அதனால் கேள்விக்கு உள்ளாக்கப்படுதல் போன்றன தொடர்பில் போதிய ஆவணங்களுடனான அறிக்கைகள் உங்களால் ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா?
பதில்:
நிச்சயமாக! கடந்த காலங்களில் இவ்வாறு நாம் செயற்பட்டுள்ளோம். பல முக்கிய பிரமுகர்கள் இலங்கை வரும் போது அவர்களுக்கு ஆவணத்தினாலான விபரங்களைக் கையளித்துள்ளோம். தொடர்ந்தும் இந்த நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அண்மையிலும் பல விபரங்களைக் கடித மூலம் மனித உரிமை ஆணையாளருக்கு அறிவித்திருந்தேன். எம்மை நாடினால் உண்மை அறியலாம் என்ற ஒரு மனப்பாங்கு சர்வதேச மட்டத்தில் உருவாகி வருவது புலப்படுகின்றது. பல பிரமுகர்கள் இதனை வெளிப்படையாகவும் கூறுகின்றார்கள். அதாவது சில தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் அடிவருடிகளாகச் செயற்பட்டு உண்மையை மறைக்கத் தலைப்படுகின்றார்கள்; ஆனால் நீங்கள் உண்மைக்கே முதலிடம் கொடுத்து வருகின்றீர்கள் என்று சிலர் கூறியுள்ளார்கள்.
கேள்வி:
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் போவதாக ஜனாதிபதி நியூயோர்க்கில் தெரிவித்திருந்தார். இது குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்:
தமிழ் மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு இந்த நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்ற உண்மையான நேர்மையான நோக்கத்துடன் இந்த அழைப்பை மேற்கொண்டிருந்தால், அதனை நான் வரவேற்பேன். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறும் ஒரு கபட நோக்கத்துடன் அரசாங்கம் இந்த அறிவிப்பை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. அவருக்கு புலம்பெயர் மக்களின் பணம் வேண்டும். உள்நாட்டில் தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என்பதே எனது பார்வை.
அடுத்தது, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினுள் இருக்கும் பரஸ்பர முரண்பாடுகளையும், வேறுபாடுகளையும் அவர் தமக்குச் சாதகமாகப் பாவித்து, அவர்களுள் முரண்பாடுகளைத் தீவிரமாக்கிக் குளிர் காய இருக்கின்றார் என்பதே எனது கருத்து. உள்நாட்டில் எம்முடன் பேச முடியாததை அவர் வெளிநாட்டுத் தமிழர்களுடன் பேசித் தீர்வு காணப் போகின்றாரா? உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இருந்து அரசாங்கத்துடன் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு நிபந்தனையை விதிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒற்றையாட்சி முறை உதவாது என்பதை அரசாங்கம் ஏற்க வேண்டும். தீர்வு ஒற்றையாட்சிக்கு அப்பாலானதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் கருத்துப் பரிமாற்றத்திற்குச் செல்ல வேண்டும்.
கேள்வி:
தமிழகத்தில் ஆட்சி மாறியிருக்கின்றது. முதலமைச்சராகியுள்ள ஸ்டாலின் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் ஏதாவது உங்களிடம் உள்ளதா?
பதில்:
இருக்கின்றது. கொரோனா தொற்று ஆபத்து தணிந்ததும் நிச்சயமாக நான் இந்த முயற்சியில் ஈடுபடுவேன். ஏற்கனவே அவருடன் தொடர்புகள் இருக்கின்றன.
கேள்வி: தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி ஒன்றை திருமலையைத் தளமாகக் கொண்ட இரு மதத்தலைவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அதற்கேற்ப நான் பல கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றேன். அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் இந்த முயற்சியை முன்னெடுப்பதைவிட சிவில் சமூக பிரதிநிதிகள் முன்னெடுப்பது காத்திரமானதாக இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதிலும் குறிப்பாக மதத் தலைவர்கள் இந்த முயற்சியை முன்னெடுப்பது சிறப்பானது. இதற்கு எனது ஆதரவு இருக்கும்.
பி2பி யில் மதத் தலைவர்களின் நெறிப்படுத்தலில் கட்சிகள் யாவரும் ஒன்று சேர்ந்தனர். அதே போல தமிழ் மக்களுக்குப் பொதுவான பிரச்சனைகள் எழும் போது இந்த மதத் தலைவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கட்சிகள் ஒன்று சேர்வது எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்று. ஆனால் தம்மை மட்டும் 24 கரட் கட்சி என்று கூறுபவர்கள் எம்முடன் சேர வரமாட்டார்கள் என்பது தான் தற்போதைய நிலை. ஒரு வேளை தங்கம் தரம் குறைந்தால் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி:
ஜெனிவாவைப் பொறுத்தவரையில் அடுத்த வருடம் தீர்க்கமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது. அதனை எதிர்கொள்வதற்கு எவ்வாறு உங்களைத் தயார்படுத்தப் போகின்றீர்கள்? அது குறித்த உங்களுடைய உபாயம் என்ன?
பதில்:
இதுபற்றி ஆராய்ந்து வருகின்றோம். சில திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே ரெலோ, புளொட் போன்ற கட்சித் தலைவர்களுடன் எமது தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர்கள் பேசி வருகின்றார்கள். எவ்வெவெற்றை ஜெனிவாவில் முன்நிறுத்த வேண்டும் என்பது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றோம். திரு.மாவை சேனாதிராஜா வருவதாகக் கூறி அவர் வரவில்லை. ஆனால் அவர் வருவார், ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் சேர்ந்து ஒத்துழைக்காவிடில் ஜெனிவாவில் தமிழ் மக்கள் நிலை கவலைக்கிடமாகி விடும். சிந்தித்து செயலாற்றி வருகின்றோம்.
நன்றி | லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலி