ஈழத்தில் இருந்து தன் வலிமையான எழுத்துக்களின் வழியாக சர்வதேச ரீதியில் கவனம் பெற்று வருபவர் கவிஞர் தீபச்செல்வன். இவரின் கவிதைகள் ஈழப் போரின் மனசாட்சியின் குரலாக முக்கியம் பெறுகின்றன. நடுகல் என்ற முதல் நாவல் வழியாக சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை தீபச்செல்வன் பெற்றுள்ளார். இந்த நிலையில் புதிய நாவலான பயங்கரவாதி அண்மையில் வெளிவந்து பெரும் கவனத்தை குவித்து வருகிறது. இந்த நாவல் குறித்து புரவி இதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலை நன்றியுடன் மறுபிரசுரம் செய்கிறது வணக்கம் இலண்டன் இணையத்தளம்.
உங்களது புதிய நாவலின் உள்ளடக்கதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.
‘பயங்கரவாதி’ என்ற எனது புதிய நாவல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பின்னணியில் ஒரு மாணவத் தலைவனின் காதலையும் பேராண்மையையும் பற்றிப் பேசுகிறது. இலங்கை அரசியலிலும் ஈழ விடுதலையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்றும் முக்கியத்துவமான களம். அதிலும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் அக்களம் நெருப்பாலும் குருதியாலும் குளித்திருந்தது. அப் பிண்ணயில் ஈழ விடுதலையில் மாணவர்கள் செய்த தியாகங்களையும் போராட்டத்தையும் வாழ்வுமீதான அவர்களின் பெருங்கனவையும் இந்நாவல் பேசுகிறது. இனவழிப்பில் தப்புகிற ஒரு குழந்தையின் வாழ்வுத் தாகமாக இந்த நாவலின் தாக்கம் வாசகர்களைப் பற்றிக்கொள்ளும் என்றுதான் நம்புகிறேன்.
நாவல் உருவான புள்ளி எங்கிருந்து தொடங்கியது?
பயங்கரவாதியை எழுதுவது ஒரு ஆபத்தான தீர்மானம்தான். ஆனாலும் கடும் யுத்த காலத்தில் நான் மேற்கொண்ட சில பயணங்களும் எடுத்துக் கொண்ட பாத்திரங்களும்தான் இந்த நாவலை உருவாக்கிய புள்ளி என்பேன். வாழ்வா, மரணமா என்று கடந்த அந்தப் பொழுதுகளின் போதே உயிர்தப்பியிருந்தால் இதையெல்லாம் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். இக் கதை உயிர் திருகும் கமொன்றில் தான் உருப்பெறத் துவங்கியது. புகழ், வருவாய் என்பதற்கெல்லாம் அப்பால் என் நிலத்தின், என் சனங்களின் கதையை பதிவு செய்ய வேண்டும் என்பதனால்தான் துப்பாக்கியின் குறிகளுக்குள் இருந்தும் இக் கதையை எழுதியிருக்கிறேன்.
நாவலை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவதுண்டா? அப்படி திருத்தி எழுதும்போது உள்ளடக்கத்தில், ஒழுங்கில் என்ன நடக்கிறது?
நாவலை முதலில் எழுதிவிட்டு பிறகு அழித்து திருப்பி எழுகிற வழக்கத்தை பயங்கரவாதியில் பின்பற்றினேன். எழுதித் தொலைத்த ஒரு கவிதையை திருப்பி எழுதிப் பாருங்கள். முன்னைய கவிதையைக்காட்டிலும் அதன் தாக்கம் உச்சமாயிருக்கும். படைப்பின் தாகம் அதுதான். நாவலின் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் எழுத்துக்கள் ஒவ்வொன்றில் நெடுவாசம் செய்ய வேண்டும் போலொரு உணர்வு. இதனால் நாவல் உள்ளடக்கத்திலும் ஒழுங்கிலும் புதிய தன்மைகள் பிறக்கின்றன. திருப்பித் திருப்பி எழுகிற போதும் அழித்துத் திருத்தி எழுதுகிற போதும் புனைவில் கற்பனைகளுக்கு எட்டாது தொலைவில் புதைந்து கிடக்கிற விசயங்கள் பளப்பளப்பாய் கிடைக்கின்றன.
நாவல் என்ற இலக்கிய வடிவம் ஏன் முக்கியமானது? நாவல் எழுதுகையில் உங்களைத் திருப்திப்படுத்தும் அம்சமாகவும், தொடர்ந்து எழுதுவதற்கான உந்துதல் தரும் விஷயமாகவும் எது இருக்கிறது?
எல்லா இலக்கிய வடிவங்களும் முக்கியத்துவமானவையே. எனக்கு கவிதை போல நாவலும் நெருக்கமானது. நாவலில் நாம் உருவாக்கும் அற்புதங்கள் நிறையவுண்டு. அதிலும் ஒரு கவிஞன் நாவல் வழி உருவாக்கும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிகரற்றவை. நாவலுக்கு பேருழைப்பு தேவை. நாவல் ஒரு அற்புதமான புரவி. சில தருணங்களில் உடல் சோர்வுறுகிற போதும் மனதில் நாவல் தரிக்காத ஒரு புரவியாக எழுதிச் சென்றபடியே இருக்கிறது. பயங்கரவாதியை எழுதி முடித்து உறங்கும் போது கனவிலும் கதை தொடர்ந்தபடியிருக்கும். நிறைய பகுதிகள் கனவில்தான் புனையப்பட்டன. எழுதி கடக்கும் அழுத்தமான விசயமாக நாவல் எனக்குத் தென்படவில்லை. அது எழுத்தின் வழி ஒரு அற்புத உலகில் சஞ்சரிக்கச் செய்கிறது. தனிப்பட்ட வாழ்வில் பெரும் துயரங்களை சந்தித்த போதும் ஓராண்டுகள் புனைவின் உந்துதலில்தான் பயங்கரவாதி நாவலுக்குள் முழுதாக உலவி வாழ்ந்திருந்தேன்.
நன்றி – புரவி