11கட்சிகளும், மற்றும் எமது கொள்ளைகளுடனும் இணைந்து பயணிக்கும் தரப்புக்களை ஒருங்கிணைத்து அரசியல் சக்தியை முதலில் உருவாக்கவுள்ளதோடு, அடுத்தபடியாக புதிய அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர்வழங்கல் அமைச்சருமான வாசுதேவநாணயக்கார வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- அமைச்சரவை கூட்டத்தொடர் மற்றும் அமைச்சின் செயற்பாடுகள் ஆகியவற்றில் பங்கேற்கப்போவதில்லை என்ற உங்களது முடிவினை ஜனாதிபதிக்கு அறிவித்ததன் பின்னர் என்ன நடந்தது?
பதில்:- எதுவும் நடக்கவில்லை. யாரும் தொடர்பு கொள்ளவுமில்லை.
கேள்வி:- அமைச்சரவைக் கூட்டத்திற்கும், அமைச்சுக்கும் செல்லமாட்டேன் என்கின்றீர்கள். இராஜினாமாவும் செய்யப்போவதில்லை எனவும் கூறுகின்றீர்கள். உங்களின் முடிவு தான் என்ன?
பதில்:- நீங்கள் குறிப்பிட்டது தான் எனது முடிவு. விமல், உதய ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரையில் இவ்வாறு தான் இருக்கப்போகின்றேன்.
கேள்வி:- அப்படியானால், அமைச்சின் செயற்பாடுகள் அல்லவா முடங்கப்போகின்றன?
பதில்:- அமைச்சின் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் ஊடாகவோ அல்லது வேறொருவரை பிரதி செய்தோ முன்னெடுக்கலாம். அதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
கேள்வி:- விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்கப் போவதில்லை என்று உறுதியாக கூறும் நிலையில் அவர்களுடன் கூட்டிணைந்து செயற்படும் நீங்கள் பதவியை துறக்கலாம் அல்லவா?
பதில்:- மக்களின் ஆணையை நான் பெற்றபோது அவர்களின் பிரதிநிதியாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன்.
ஆகவே என்னால் பதவியை துறக்க முடியாது. ஆட்சியாளர்கள் விரும்பினால் நீக்கலாம்.
நேர்காணல்:- ஆர்.ராம்