குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசக்கூட நேரமில்லாத நிலையில், கையில் இருக்கும் போனை அதனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை பார்த்துக்கொண்டு அம்மாவை தொந்தரவு செய்யாமல் இரு’ என்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அம்மா-அப்பாவைவிட போன் தான் அதிக மகிழ்ச்சியை தரும் விஷயம் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.
சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர் களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர்களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடுகளால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. “இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
நன்றி | மாலை மலர்