செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடலுக்கு யோகா… உள்ளத்துக்கு தியானம்…

உடலுக்கு யோகா… உள்ளத்துக்கு தியானம்…

3 minutes read

உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளம் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் நோயும் மனக்கவலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எதனால் நோய் வருகின்றது. அது ஏன் பெருகிக்கொண்டே செல்கின்றது. நோயின்றி வாழ என்ன வழி என்று மனிதன் சிந்தித்துப் பார்க்க தவறிவிட்டான். சிந்தித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதுதான் யோகக்கலையாகும். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும் ஆரோக்கியமாக வாழ அழகான நெறிமுறைகளை யோகத்தந்தை பதஞ்சலி மகரிஷி அஷ்டாங்க யோகம் என்று எட்டு படிகளில் அழகாக அக்காலத்தில் வடிவமைத்துள்ளார். இதனை நாம் வாழ்வில் கடைபிடிக்க முயன்றாலே போதும் வாழ்க்கை வளமாக இருக்கும். நலமாக இருக்கும்.

அஷ்டம் என்றால் எட்டு. இதில் முதல் இரண்டு படிகள் மன ஒழுக்கம். இந்திரிய ஒழுக்கம், மனதால் எப்படி நல்ல எண்ணங்களுடன் வாழ்வது ? பிறருக்கு மனதால், வாக்கால், செயலால் துன்பம் விளைவிக்காமல் எப்படி வாழ்வது?

பேராசைப்படாமை, பொறாமைபடாமை, கோபப்படாமை போன்ற குணங்களுடன் மனிதன் வாழ வேண்டும். சுருங்கச் சொன்னால் நமது எண்ணம், சொல், செயல் நமக்கும் தீங்கு விளைவிக்ககூடாது. மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ வேண்டும், இதுதான் இயமம், நியமம், என்ற இரண்டு முக்கிய படிகள் ஆகும். இதுதான் கடினமான ஒரு பயிற்சியாகும். இதில் வெற்றி பெற்றாலே முழுமையான ஆரோக்கியத்தை நோக்கி நாம் சென்றுவிடலாம்.

இன்றைய பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்வில் இயமம், நியமம் இரண்டுமே முழுமையாக இல்லாத காரணத்தினால் தான் மனதளவில் பலவகையான பிரச்சினைகள் நிறைய மனிதர்களுக்கு உள்ளது. அது உடல் குறையாகவும் மாறியுள்ளது. நோயாகவும் மாறுகின்றது. எனவே மனிதர்கள் ஒவ்வொருவரும் மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ முதலில் மன ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் பயில்வது மிகவும் அவசியமாகும்.

நமது தேவை வேறு, ஆசை வேறு, பேராசை வேறு, நமது தேவைகள் பூர்த்தியானால் போதும் என்று வாழ்பவனுக்கு நோய் வராது. ஆசைகளை பூர்த்தி செய்ய நினைப்பவன் அல்லல்படுவான். பேராசைகள் பூர்த்தி செய்ய நினைப்பவன் பேரழிவை அடைவான் என்பதுதான் சான்றோர் வாக்கு.

உண்ண உணவு தேவை, சாதாரணமாக காலை உணவுக்கு இட்லி போதும். ஒரு சட்னி போதும். இது தேவை.நாம் ருசியாக சாப்பிட ஆசைப்பட்டு பல விதமான பதார்த்தங்களை காலை சிற்றுண்டிக்கு சாப்பிடுகிறோம். பின்பு அஜீரண கோளாறு. வாயு பிரச்சினை என்று அல்லல் படுகின்றோம்.

நமது வருமானம் குறைவு, ஆனால் மிகப்பெரிய ஓட்டலில் வருமானத்திற்கு அதிகமாக சாப்பிடுகின்றோம். அதனால் கடன் வாங்கும் நிலை ஏற்படுகின்றது. கடன் பேரழிவை தருகின்றது. இது ஒரு சிறிய உதாரணம்தான். இதனை இயம, நியம ஒழுக்கத்தில் நாம் சரி செய்து விடலாம்.

மூன்றாவது படி தான் ஆசனம். ஆசனம் என்றால் நிலையான இருக்கை. இதன் மூலம் உடலை பல வகைகளில் வளைத்து அதன் மூலம் உடல் உறுப்புக்களை திடமாக, வளமாக, நோயின்றி 120 வருடம் வரை மனிதன் வாழலாம். எளிமையான ஆசனங்கள் குழந்தை பருவத்திலேயே பயின்றால் வாழ்வு வளமாக இருக்கும். மனிதனின் ஆரோக்கியம் அவன் முதுகுத்தண்டை சார்ந்து தான் உள்ளது. முதுகுத்தண்டு திடமாக இருந்தால் தான் வாழ்வு வளமாகும். அதற்கு யோகாசனம் பயன்படுகின்றது.

ஒரு மனிதன் யோகாசனத்தை பயின்றால் அவனது பண்புகள் மாறிவிடும். அதாவது எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்து கொண்டே வரும், எனவே நம்மிடமுள்ள தீய எண்ணங்களை மாற்றி நல்ல பண்புகள் வளர்வதற்கு யோகாசனம் ஒரு அருமையான கவசமாக நமக்கு அமைகின்றது.

ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று வகையான குணங்கள் உள்ளன, தமோ குணம், ரஜோ குணம், சத்வ குணம் உள்ளன. இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் மனிதன். ஒவ்வொரு மனிதரிடமும் இதில் எதாவது ஒன்று உயர்ந்து நிற்கும்.

தமோ குணம்:இது மட்டமான அதிர்வலையாகும். சோம்பல், பொறாமை, பேராசை, கோவம், பிறரை மதிக்காமலிருத்தல், பிறர் பொருளுக்கு ஆசைப்படுத்தல் முதலிய பண்புகள் தமோ குண அதிர்வலைகள்.

ரஜோ குணம்:சுறுசுறுப்பு, உற்சாகம், நல்லதே செய்தல், சற்று டாம்பீகமாக இருந்தாலும், நல்லதே செய்வார்கள் இது ரஜோ குண அதிர்வலைகளாகும்.

சத்வ குணம்: அகிம்சை,அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், எல்லோரையும் நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புடைய அதிர்வலைகள்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More