தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் தண்ணீர் தேவைப்படுகிறது. மலச்சிக்கலை தடுக்கவும், உடல் வெப்ப நிலையை சீராக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அதேவேளையில் தேவைக்கு அதிகமாகவும் தண்ணீர் பருகக்கூடாது.
தேவைக்கு அதிகமாக தண்ணீர் பருகினாலும் உடலில் நீர்ச்சத்து இழப்பு உண்டாகும். உடலில் உள்ள சோடியம் அளவும் நீர்த்துபோய்விடும். அதற்கு ‘ஹைப்போனட்ரீமியா’ என்று பெயர். உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலட்ரோலைட்டுகள் நீர்த்துப்போகும்போது இது ஏற்படுகிறது. அதிகபடியான நீரிழப்பு கவலைக்குரிய விஷயமாகும்.
அதிக அளவு தண்ணீர் பருகினால் உடலில் உள்ள திரவ அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அப்போது சோடியம் அளவு குறையும். அதனால் வாந்தி, குமட்டல், சோர்வு, தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.
அதிக அளவு தண்ணீர் பருகும்போது சிறுநீரகங்கள் கூடுதலாக செயல்படவேண்டியதிருக்கும். சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 28 லிட்டர் திரவத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதிகப்படியாக தண்ணீர் பருகுவதால் வியர்வை மற்றும் அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் சிறுநீரகங்களின் இயக்கம் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்.
இரவில் நிறைய தண்ணீர் பருகுவது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். தூங்கும்போது மூளை ஆண்டிடையூரிடிக் ஹார்மோனை வெளியிடும். இது ரத்தத்தில் தண்ணீரின் அளவை சமநிலைப்படுத்தக்கூடியது. மேலும் இந்த ஹார்மோன் சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைத்து இரவில் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த துணைபுரியக்கூடியது. அதனால் இரவில் அதிக தண்ணீர் பருகக்கூடாது.
அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகும்போது உடலில் பொட்டாசியம் குறைந்து, கால் வலி, எரிச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். உடலில் உள்ள சோடியம் அளவு குறையும்போது, சவ்வூடு பரவல் செயல்முறையின் மூலம், நீர் செல்லுக்குள் நுழைகிறது. இதனால் உடலில் உள்ள செல்கள் வீக்கம் அடையும். அதன் காரணமாக தசை திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
தினமும் எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது போதுமானது. கோடை காலத்தில் சற்று கூடுதலாக தண்ணீர் பருகலாம். அதைவிட திரவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் நல்லது.
நன்றி | மாலை மலர்