இட்லி, தோசை, சப்பாத்தி, அடை மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கக் கூடிய இந்த வெங்காய மசாலா பச்சடி இப்படி நீங்கள் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள், கொஞ்சம் வைத்து சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் நாக்கு கேட்க ஆரம்பித்துவிடும். அவ்வளவு சுவையான வெங்காய மசாலா பச்சடி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வெங்காய மசாலா பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
சீரகம் – அரை ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 3,
பூண்டு பற்கள் – 12,
கருவேப்பிலை – ஒரு இணுக்கு,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
தாளிக்க:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கடுகு – அரை ஸ்பூன்,
உளுந்து – அரை ஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை ஸ்பூன்,
இடித்து வைத்த பூண்டு – மூன்று,
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு இணுக்கு.
வெங்காயம் மசாலா பச்சடி செய்முறை விளக்கம்:
வெங்காய மசாலா பச்சடி செய்ய முதலில் மூன்று பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நாலைந்தாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பூண்டைத் தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்ததில் ஒரு வானலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை பச்சை வாசம் போக வறுபட்டதும் ஒரு இணுக்கு கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை நான்கைந்தாக பிய்த்து போட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் வெறும் மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பிரஷ் ஆன மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு ஒரு முறை பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆரியதும் இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ரொம்பவும் நைசாக அரைக்காமல் கொரகொரவென்று ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு அருமையான தாளிப்பு கொடுத்தால் சுவையான வெங்காய பச்சடி தயாராகி விடும்.
தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கால் ஸ்பூனுக்கும் குறைவாக பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு தாளித்து, இடித்து வைத்த பூண்டு பற்களை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். தாளிப்பு எல்லாம் அடங்கியதும் இந்த வெங்காய மசாலா பச்சடியுடன் சேர்த்து கலந்து விடுங்கள், அவ்வளவுதான் செம்ம டேஸ்ட்டியான வெங்காய பச்சடி இதே மாதிரி நீங்களும் வீட்டில் செஞ்சு பார்த்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி | தெய்வீகம்