சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்தினர் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும்.
எனவே எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், தங்களது அழகைப் பராமரிப்பு உண்ணும் உணவுகளில் கவனத்துடன இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமத்தினர் உணவுகளில் கவனம் இல்லாமல், கண்டதை உட்கொண்டால், அவர்கள் மேன்மேலும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் அவஸ்தைப்படக்கூடும்.
இங்கு எண்ணெய் பசை சருமத்தினர் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாதவைகள்!
கொழுப்புமிக்க இறைச்சிகள்
கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த இறைச்சிகளான மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டுக்கறி போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இவை சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பை அதிகரித்து, முகப்பருவை அதிகம் வரச் செய்யும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்
பால் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தான். ஆனால் எண்ணெய் பசை சருமத்தினர் பால் பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்தால், சருமத்தின் எண்ணெய் பசை இன்னும் அதிகரித்து, பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும்
சர்க்கரை
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சர்க்கரை மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, முகப்பரு அதிகம் வரச் செய்யும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் பானங்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.
உப்புமிக்க உணவுகள்
எண்ணெய் பசை சருமத்தினர் உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. மேலும் உப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரெஞ்சு ப்ரைஸ், பிஸ்கட் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பியில் அதிகளவு எண்ணெய் சுரக்க வழிச் செய்து, சருமத்தை மேன்மேலும் எண்ணெய் பசையாக வைத்துக் கொள்ளும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள்!
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றி, அத்தியாவசிய சத்துக்களை உறிஞ்ச உதவும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பும் மற்றும் சருமத்திற்கும் நல்லது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான ஓட்ஸ், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள், சோளம், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் அதிகம் உள்ளது. இது உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும், சருமத்தை பொலிவுடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே வெள்ளரிக்காயை பச்சையாக தினமும் சாப்பிடுங்கள்.
தண்ணீர்
முக்கியமாக எண்ணெய் பசை உள்ளவர்கள், குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். மேலும் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ பருக வேண்டும். இதனால் சரும ஆரோக்கியமும், அழகும் தான் மேம்படும்.
ஒமேகா-3 ஃபேட்டி அமிலம்
ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதால், பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கும். அதில் பல்வேறு நோய்கள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளும் அகலும். எனவே ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களான மீனை அதிகம் உட்கொள்ளுங்கள்.
கிரேப் ஃபுரூட்
கிரேப் ஃபுரூட்டில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதே சமயம் கலோரிகள் குறைவாக உள்ளதால், இது வேகமாக செரிமானமாகும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். அதற்கு இந்த பழத்தை ஜூஸ் போட்டு சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
ஆதாரம் ஒன் இந்தியா நாளிதழ்