நடவடிக்கைகள்
குளிர் காலம் வந்ததும் கதகதப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நெருப்பில் குளிர் காய்தல், உடல் முழுக்க மூடிய உடைகளை அணிதல் என குளிரில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாம் சருமம் மற்றும் கூந்தலை அதற்கேற்ப பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் நாம் சிகிச்சையால் மட்டும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்துள்ளது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சரும ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவையும் நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகிறது. குளிர்காலத்தில் சருமத்தின் மென்மை தன்மையை பராமரிக்க சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு குளிக்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம். குளிர் காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்களை தடவ வேண்டியது அவசியம். அவ்வாறு பயன்படுத்தும் கிரீம்கள் தரமானதாக இருக்கவேண்டியது கட்டாயம்.
பராமரிப்பு முறைகள்
குளிக்க பயன்படுத்தும் நீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இது குளிப்பதால் ஏற்படும் ஈரப்பத இழப்பு மீண்டும் கிடைக்க உதவுகிறது. மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். இது உடலில் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பசையை குறைத்துவிடும்.
கூந்தல் பராமரிப்பு
குளிர் காலங்களில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால் கூந்தல் மென்மையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் எண்ணெய் தடவலாம். இதனால் கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும், எண்ணெய் சூடுபடுத்தி தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊறவிட்டு குளிக்கலாம்.
அதேபோல், மூலிகை சாறு ஏதேனும் தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றை அதிக நேரம் ஊறவிடக்கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி உடையவை. அவை வெயில் காலங்களுக்கே ஏற்றது. குளிர் காலங்களில் கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து பின்னுவது நல்லது. இது குளிர்ந்த காற்றில் கூந்தல் வறண்டு போவதை தவிர்க்கும்.
ஆதாரம்: தினகரன் நாளிதழ்