கொரோனா வைரஸ் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தப்படும் இறைச்சி, மீன் வகைகளில் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் சால்மன் வகை மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இறைச்சி மற்றும் மீன் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், பிரீசரில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் ஆராய்ச்சியாளர்கள் சேமித்துவைத்தனர்.
அப்படி குளிர்ந்த நிலையில் வைக்கப்படும் இறைச்சி வகைகளில் வைரஸ்கள் வளரக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார், ஆராய்ச்சியாளர் பெய்லி. தென்கிழக்கு ஆசியாவில் பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சி பொருட்கள் வைரஸ் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார், பெய்லி.
இதேபோன்ற சூழலில் வைரஸ் உயிர்வாழ முடியுமா, இல்லையா என்பதை ஆராய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் சொல்கிறார். ஆய்வின் முடிவில் குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி வகைகளில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவிட்-2 வைரஸ் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி | மாலை மலர்