களத்தில் நின்று காலத்தை வென்ற கவிஞன் !!
இனத்தின் குரலாய் கடைசி வரை ஓயாத கலைஞன் !
——————————————————
கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
( ஈழ விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக உணர்வூட்டினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் உரத்து கூவினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய புதுவை போர் மௌனித்த 2009 மே19 பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். எங்கள் மக்களுக்காக ஓங்கி ஒலித்த இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம் ?
டிசம்பர் 3ம் திகதி ஈழப் பெருங்கவி புதுவை இரத்தினதுரையின் பிறந்த நாளையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.)
புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருந்ததை மறுதலிக்க முடியாது. சுதந்திர கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும்.
உண்மையில் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் சமாந்திரமாகவே பயணித்துள்ளன எனலாம்.
கனதியான கவிதை வீச்சும், உயிர் மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு ஈழ விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. ஈழ விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் வலிமையை உரைத்தன. அவையே எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையை எடுத்துக் கூறின.
விடுதலைப் போர்க்கவி புதுவை :
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை, போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். கவிஞர் புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை உணர்ந்து பார்ததோமானால்
இழந்து போனவனுக்கு
வாழ்க்கை துயரம்…
எழுந்து நடப்பவனுக்கு
எல்லாமே மதுரம்…
துயரம் அழுவதற்காக
அல்ல… எழுவதற்காக…
எனத் தைரியம் மேலோங்கும்.
புத்தூரில் மலர்ந்ந புதுவை :
புதுவை இரத்தினதுரை என அழைக்கப்படும் வரதலிங்கம் இரத்தினதுரை புத்தூரில் 1948 திசம்பர் 3 பிறந்தார். ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும், சிற்பக் கலைஞரும் ஆவார். ஏராளமான தமிழ்த் தேசியப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார்.
14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய இந்த மண் எங்களின் சொந்த மண் பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுபூர்வமான பாடல் ஆகும்.
புதுவை இரத்தினதுரை எழுதிய
வானம் சிவக்கிறது (1970), இரத்த புஷ்பங்கள்(1980), ஒரு தோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள் , உலைக்களம் , பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் ஆகியன வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் ஆகும்.
களத்தில் நின்ற கவிஞர் :
ஒரு படைப்பாளி தன் சொந்த அனுபவங்களில் உயிர் வாழ்கிறான். படைப்பாளியின் சுயானுபவம் அதில் தங்கியிருக்கிற போது படைப்பு உயிர்ப்போடு நிற்கும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் வாழ்வியல் சார்ந்து அனுபவம் ஒவ்வொரு வகையாய் அமையும். அவ்வாறே புதுவையின் வரிகளில்….
வெடிக்கும் எதிரிகணைகள்
ஒவ்வொன்றுக்கும்….
விரல்மடித்துக் கணக்கெடுத்தபடி
இருந்தேன்…
இடையிற் கண்ணயர்ந்து
போனேன்…
விழிப்புற்ற போதும்
வந்து வெடித்தன
குண்டுகள்….
மீண்டும் எண்ணத்
தொடங்கினேன்…
இடையிற் சிரிப்பு வந்தது,
சிரித்தேன்….
விளையாட்டாகிவிட்டது
யுத்தம்…..
அப்பாடா விடிந்து
வருகிறது….
இரவு எத்தனை
குண்டுகள்
என்றாள் மனைவி…..
எழுந்தமானத்தில்
எழுபது என்றேன்…
நேற்று என்பது
ஏன் பத்துக் குறைந்தது
என்றாள்…,,
நெடுங்கேணியில்தான்
நிற்கிறான் கேட்டுப் பார்
கேட்காமலா விடுவோம்?
என களத்தில் உணர்வோடு நின்ற கவிஞர் அவர். கவிதை எழுத ஆரம்பித்தது தொட்டு இன்று வரை. அவரது பாடு பொருளில் பெருமளவு மாற்றமில்லை. மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் அவரது கவிதை பேசும்.
வதைபடுதல் ஒவ்வொரு இடத்தும் ஒவ்வொரு வகையாக வெளிப்படும் என்பது தவிர வேறொன்றுமில்லை.
விடுதலைப் பாதையில் இணைவு :
தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டவர். போரியல் வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை
“அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக்
கற்றுக்கொள்…
பெற்ற தாய் சுமந்தது
பத்து மாதம்
நிலம் சுமப்பதோ
நீண்ட காலம்…
அன்னை மடியில்
இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை
நீ வைத்தது
தாயகத்தின்
நெஞ்சில்தானே….
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ
எருவாவதும்
தாய்நிலத்தின்
மடியில்தானே…,
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்…
பலமிழந்து போனால்
இனம் அழிந்து போகும்..,
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக்
காதலிக்கக் கற்றுக் கொள்…
இத்தகைய மகத்தான சொற்களை வடித்து உணர்ச்சிகர கவிதையாக எழுதியவர் புதுவை.
நீண்ட விடுதலைப் பயணத்தில் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்து வந்துள்ளார் பெருங்கவி புதுவை.
கடைசி வரை ஓயாத கவிஞன் :
அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவையின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன. புதுவை இரத்தினதுரை கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்றே அவற்றை கூறலாம்.
கவிஞர் இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இதனாலேயே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம். புதுவை இரத்தினதுரையின் அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது.
இந்த மண் எங்களின்
சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி
யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து
தலைகள் குனிந்து
நின்றது போதும்
தமிழா – உந்தன்
கலைகள் அழிந்து
கவலை மிகுந்து
கண்டது போதும்
தமிழா இன்னும்
உயிரை நினைத்து
உடலை சுமந்து
ஓடவா போகிறாய்
தமிழா…
என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாடல் புதுவை இரத்தினதுரை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் பாரிய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது
வியட்நாம் போராட்டம் நிகழ்ந்த போது, ஒரு வியட்நாமியனாக அவர் கவிதை உணரச் செய்தது. சிலியில் அதிபர் ஆலண்டே கொல்லப்பட்டபோது, சிலிக் குடிமகனாக அவரது கவிதை கோபம் கொண்டெழுந்தது. 1971ஆம் ஆண்டில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, அவர்களுடன் சேர்ந்து அவரது கவிதை அழுதது. யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்ற போது, அந்தப் போராட்ட சக்திகளோடு இணைந்து அவருடைய குரல் ஒலித்தது. இப்படி களமாடுவதிலும், கவிதையாடுவதிலும் புதுவை கடைசி வரை ஓயவில்லை.
தமிழ் இனத்தின் குரல் :
தமிழ் இனத்தின் சார்பாக புதுவையின் குரல் எப்போதும் கேட்டது. அவருடைய காலக் கவிதைகள் எப்போதும் சூடு தணியாமல் உணர்வை வைத்திருந்தன. இக்கவிஞன் கூறியது போல “இந்தப் போராட்டத்துக்கு என்னை ஒப்புக் கொடுத்திருக்கின்றேன். இந்தப் பணி முற்றுப் பெறும் போது, வேறு எங்கு வரை துயரக்குரல் கேட்கிறதோ, என்னுடைய கவிதைகளுமாக நான் அங்கு போய்ச் சேருவேன்” என வியாசிக்கின்றார்.
ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட
கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய்,
இருமல் மருந்து,
மனைவியின்
மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த
மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை
அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத
துயரெது?
ஊரிழந்து போதல் தான்.
இந்த கொடூர நிலை அரை நூற்றாண்டாக எங்கள் ஈழமண்ணில் தொடர்ந்தது.
மானுட விடுதலை வேண்டி :
தமிழ் இன விடுதலை வேண்டியும்,
அதி உச்ச எல்லையான மானுட விடுதலையை கோரிய கவிஞனை சாதாரணமான இலக்கியக் கோட்பாட்டுக்குள் சுருக்கிவிட இயலாது. ஏனெனில் புதுவை எப்போதும் களமும் கவிதையுமாய் வாழ்ந்தவர்.
போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவரும் புதுவை எனலாம். எங்கள் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவரும் அவரே.
எங்கள் விடுதலைப்போராட்டம் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும் சொல்லும் ஆய்வுக்கு புதுவையின் கவிதைகளை உசாத்துணையாகும்.
இதனாலேயே இவர் எழுதிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் என்ற ஆன்மிகப் பாடலை கூட இலங்கை இராணுவ 2014 செப்டம்பரில் ஒலிபரப்புவதற்குத் தடை செய்து எதிர்கால வரலாற்றை மூடி மறைக்க ஆதிக்க அரசு எத்தனிக்குறது.
புதுவை இரத்தினதுரையின் கவிதைகள் பதுங்குகுழி வாழ்க்கைக்கும், விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. போர்க்கால படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன புதுவை கவிதைகளும் தான். அழுதபடியே சேர்ந்துவந்தன வரிகள். ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய் மீள மிளிர்ந்தன.
பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன துயரத்தை கூறியதும் புதுவையின் கவிதைகள்.
வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை தியாக வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும் தான்….
சும்மா காற்றில் பற்றியா
இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய
எத்தனை காலம் பிடித்தது…
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்…
எத்தனை பேரை நெய்யாக
வார்த்தோம்..,,
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு…
பற்றியெரியப் போகுதெனப்
பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே….
இந்தத் தீயின்
சுவாலையிற்தான்
மண் தின்னிகள் மரணிக்கும்…..
இத்தகைய கவிப்படைப்பின் மூலம் ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.
களத்தில் மலர்ந்தவை பாடல்கள் :
இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. அப்போது 1989இல் வெளிவந்த ஒலிநாடாவான ‘களத்தில் மலர்ந்தவை’ ஈழமெங்கும் எட்டுத் திசையிலும் ஒலித்த பாடல்களாகும்.
அத்தோடை புதுவை எழுதிய பாடல்களில் இந்த மண் எங்களின் சொந்த மண், வேர்கள் வெளியினில் தெரிவதில்லை, காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே,
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே,
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று, தீயினில் எரியாத தீபங்களே,
சங்கு முழங்கடா தமிழா என்றும் தமிழர் மனங்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஈழ விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக உணர்வூட்டினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் உரத்து கூவினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய புதுவையை போர் மௌனித்த 2009 மே19 பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். எங்கள் மக்களுக்காக ஓங்கி ஒலித்த இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம் ?
மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், அவர்களின் விடுதலைக்குமாக, பயணித்து, சர்வ தேசியம். கவிதைப் பயணம் மூலமாக மட்டுமல்ல, களப்பணியாலும் வளப்படுத்திய பாப்லோ நெருடா, நசீம் இக்மத், வால்ட் விட்மன், பாலஸ்தீனக் கவிஞன் மக்மூத் தார்வீஷ், கருப்பினக் கவிஞன் லாஸ்டன் ஹ்யூஸ் இவர்களின் திசைவழியில் புதுவை இரட்ணதுரையும் பயணிக்கிறார் என்றால் மிகையாகாது.