யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மாத்திரமே 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவினரே அதிகம்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள். இவர்களில் உயிர்கொல்லி ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர். இவை மூன்றையும் பயன்படுத்துவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மூக்கு மூலமாக நுகர்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஊசி மூலம் அதனை நுகர்கின்றனர்.
உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு உயிரிழக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 15 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.