“அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னரே அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். அரச தரப்பினருடான பேச்சின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பழைய பல்லவியையே கூறுகின்றார். அரசியல் திருவிழாக்களுக்காக அரசியல் கைதிகளை தோரணங்கள் ஆக்கக்கூடாது.”
– இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.
அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கும் இடையே தீர்வு தொடர்பாக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு எந்த உத்தரவாதமும் வழங்கிவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதயான கனகரத்தினம் ஆதித்தன் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால், இது விடுதலை அல்ல. ஆதித்தனுக்கு எதிராக இன்னொரு வழக்குக்கு நாள் குறிப்பட்டுள்ளது.
இறுதியாக அரச தரப்புடன் நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றார். உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான பட்டியலைத் தாருங்கள் என்று அவர்கள் கேட்டார்கள் என்றும், நாம் அதைத் தயாரித்துக் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் நீண்டகாலமாக அரச தரப்பினரிடம் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதுதான் முதல் தடவையாகப் பேசுவது போன்று பட்டியல் கேட்கின்றனர். அதை இவர்கள் தயாரித்துக் கொடுக்க இருக்கின்றனர். இது யாரை ஏமாற்றும் நாடகம்?
அரசியல் கைதிகள் ஐந்து பேரின் விடுதலை தொடர்பாகவும் பேசப்படுகின்றது. யார் அந்த ஐந்து பேர்? இவர்களைத் தெரிவு செய்யும் உரிமை யாருக்கு உள்ளது?
அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்த பின்னரே அரச தரப்புடன், தமிழ்த் தரப்பு பேச்சுக்குக் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்து அவர்களைக் கரைசேர்க்கும் தரகுச் செயலாகவே இதை நோக்க முடியும். அவ்வாறு செயற்பட்டால் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டுவர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவரது கைதுக்கு எதிராகத் தற்போது கோஷம் எழுப்புபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஆதரவுடனேயே கடந்த 44 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. நீங்கள் தற்போது அனுபவிப்பதையே தமிழ் மக்கள் 44 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசிடம் வலியுறுத்துங்கள். அதுவே உங்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும்.
பேச்சில் ஈடுபடும் தமிழ் தரப்புகளுக்கும், அரச தரப்பினருக்கும் நாம் வலியுறுத்துவது உங்கள் அரசியல் திருவிழாவுக்காக அரசியல் கைதிகளை தோரணங்கள் ஆக்காதீர்கள். அவர்களின் விடுதலையை உறுதி செய்யுங்கள்” – என்றுள்ளது.