“இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் ஆட்சியை மாற்ற முடியாது. அரசு தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி அப்படியே இருப்பார். நாடாளுமன்றமும் அப்படியே இருக்கும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி பின்னடிக்கின்றதா? வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? ஆகிய கேள்விகளுக்குப் பாலித ரங்கே பண்டார பதிலளிக்கும் போது தெரிவித்ததாவது:-
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. அது தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் முடிவு.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை எதிர்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் தேர்தல்களில் வென்றும் இருக்கின்றோம், தோல்வியடைந்தும் இருக்கின்றோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றோம் என்பதற்காக நாம் ஒதுங்கி இருக்கவில்லை. வேலை செய்கின்றோம். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் ஆட்சியை மாற்ற முடியாது. அரசு தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி அப்படியே இருப்பார். நாடாளுமன்றமும் அப்படியே இருக்கும்.
நிலைமை அப்படி இருக்கும் போது தேர்தல் தோல்வி பற்றி நாம் பயப்படத் தேவையில்லை” – என்றார்.