“மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றார்கள். அந்த ஒற்றுமைக்கு மாறாக பிரிந்து நிற்கும் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்கபாடத்தை மக்கள் புகட்டுவார்கள். அவர்களும் எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தை உணர்ந்து எமது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைவார்கள்” – என்று நம்பிக்கை வெளியிட்டார் அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு – கிழக்கில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி களமிறங்கியுள்ளது. தமிழ் மக்கள் ஒரு ஐக்கியப்பட்ட சூழ்நிலையை விரும்பி இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு சிலர் தங்களுடைய ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தனிவழியில் சென்றிருக்கிறார்கள்.
ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த ஒன்றரை வருட காலமாக அதனை உருவாக்க நாங்கள் பேசுபொருளாக இருந்து வந்தாலும் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாகத் தனித்து நிற்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. இப்போது அவ்வாறு தனிமையிலும் சென்றிருக்கின்றார்கள்.
இன்னும் ஒன்றரை மாதத்தில் மக்கள் தங்களுடைய தீர்ப்புகளை வழங்கி உருவாக்கப்பட்ட கூட்டணியுடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைந்து பயணிக்கச் செய்வார்கள் என்று நம்புகின்றோம்” – என்றார்.