தெற்கில் மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர் எனவும், எழுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் நேற்றிரவு இரண்டு ஹயஸ் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது ஹயஸ் வாகனம் ஒன்றின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தரும், அதில் பயணித்த சாரதியின் சகோதரனான 27 வயதுடைய இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றைய ஹயஸ் வாகனத்தின் சாரதியும், அதில் பயணித்த 9 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்களும் படு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் நேற்று மாலை ஓட்டோவும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது ஓட்டோவின் சாரதியான 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பட்டா வாகனத்தின் சாரதியும், அதில் பயணித்த 7 வயது சிறுவனும் (சாரதியின் மகன்) படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறையில் இன்று அதிகாலை காரும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது காரின் சாரதியான 67 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த சாரதியின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தனியார் பஸ்ஸில் சென்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தனியார் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.