ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன பங்கேற்கவில்லை. அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்கவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.