“கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். அதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 ஆயிரத்து 300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.”
– இவ்வாறு கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“டெங்கு நோயால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,800 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 600 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 700 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரம், உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” – என்றார்.