தமிழர் தலைநகர் திருகோணமலையில் 4 அடி புத்தர் சிலையை வைப்பதற்கு எதிராகத் தமிழ்த் தேசியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் நேற்று இரவிரவாகத் தொடர்ந்தது. இன்று அதிகாலையும் போராட்டம் தொடர்கின்றது.
270 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாகக் கூறப்படும் பிக்குகளை நினைவுகூரும் முகமாகவும், அவர்களைக் கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக மகாவம்சத்தில் கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலை தாய்லாந்திலிருந்து வரும் பிக்குகளால் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரவையால் நேற்றுக் காலை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் ஆகியோர் தலைமையில் நேற்றுக் காலையிலிருந்து, சிலை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்துக்கு முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பொலிஸார், புலனாய்வாளர்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதும் போராட்டக்காரர்கள் கலையவில்லை. அங்கேயே கூடாரம் அமைத்து தங்கி நின்று போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இந்தநிலையில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் அங்கு இரண்டு தடவைகள் சென்று, “புத்தர் சிலை வைக்கப்படாது. கலைந்து செல்லுங்கள்” என்று போராட்டக்காரர்களிடம் கேட்டுள்ளார்.
“வாய்மொழிமூல உத்தரவை நம்ப முடியாது. எழுத்தில் தரவேண்டும்” என்று போராட்டக்காரர்கள் கோரப்பட்டபோது அதனை மாவட்ட அரச அதிபர் வழங்கவில்லை.
இதேவேளை, பல தரப்புக்கள் ஊடாகவும் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை நேற்று நள்ளிரவு வரையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அவர்கள் அங்கிருந்து அகலாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.