பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் துணை ராணுவ எல்லைப் படை மீது சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாகாணத்தின் துர்பாத் மாவட்டத்தில் உள்ள கமிஷனர் வீதியில் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்கச் செய்ததில், குறைந்தது ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரி மற்றும் இரண்டு துணை ராணுவப் படையினர் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர் என்று துணை ஆணையர் பஷீர் அகமது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தற்கொலைத் தாக்குதலின் இலக்கு துணை ராணுவப் படையினர், ஆனால் தாக்குதலின்போது பொலிஸ் வாகனம் வெடித்ததில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, காயமடைந்தவர்களில் ஒரு பெண் அதிகாரியும் அடங்குவதாக அவர் கூறினார்.
வெடிவிபத்தை அடுத்து, பாதுகாப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவோ அல்லது தனி நபரோ பொறுப்பேற்கவில்லை.
பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் அப்துல் குத்தூஸ் பிசென்ஜோ குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
“பயங்கரவாதத்தின் நோக்கம் வளர்ச்சிப் பணிகளை நிறுத்துவதும், பாதுகாப்புப் படைகளை அச்சுறுத்துவதும் ஆகும். பயங்கரவாதிகளின் தீய எண்ணங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது, பாதுகாப்புப் படையினரின் உறுதியும் தைரியமும் இதுபோன்ற செயல்களால் சிதைந்துவிடாது” என்று முதல்வர் கூறினார்.