செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்குப் பயப்படுகின்றதா? – வீரசேகர கேள்வி

சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்குப் பயப்படுகின்றதா? – வீரசேகர கேள்வி

2 minutes read

வடக்கில் சட்டத்தரணிகள் தனக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், பணிநிறுத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் வடக்கு சட்டத்தரணிகள் பிரிவினைவாதிகள் என்றும் சாடியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மாண்புமிகு நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக நீங்கள் கூறுவதை நான் வன்மையாக மறுக்கிறேன். ஜூலை 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையைக் கவனமாகக் கேளுங்கள்.

நமது நீதித்துறை சுதந்திரமாகவும் வெளிப்புற அழுத்தங்களிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்கு தெரியும். அதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நமது உயர் நீதிமன்றத்தைப் பற்றி ஆற்றிய உரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். நாட்டின் உயர் நீதிமன்றம் மணிக்கூண்டு போல் ஊசலாடுவதாகக் கூறினார். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை? இது நீதித்துறைக்கு கடுமையான அச்சுறுத்தல் இல்லையா? சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்குப் பயப்படுகின்றதா?

அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோ, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டு நீதித்துறை தொடர்பில் முன்வைத்த அறிக்கையை நினைவுபடுத்த விரும்புகின்றேன். நமது நீதித்துறை மீது அவர் கூறிய சில அபத்தமான குற்றச்சாட்டுகள்:-

1. நமது நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு அரசு மற்றும் அரசியல் நியமனங்களை நாடுகின்றனர். எனவே, எதிர்கால வேலைகளுக்காக , வழக்குகளில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்குவதற்கான போக்கு அவர்களுக்குள்ளது.

2. ஒட்டுமொத்த நாட்டின் நீதித்துறையின் சுதந்திரம் படிப்படியாக சிதைந்து வருகின்றது.

3. சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுள்ளதுடன் சங்கம் அரசியல்மயப்படுத்தப்படுவதும் பாரதூரமான பிரச்சினையாகும்.

4. நீதிபதிகள் பெரும்பாலும் குற்றவாளிகளை அவர்கள் முடிக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றார்கள்.

5. பொதுவாக நீதித்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியம் பற்றிப் பேசும் வழக்கறிஞர்கள் சங்கம், நமது நீதித்துறை குறித்து மொனிகா பின்டோ தாக்கல் செய்த மிகவும் கேவலமான அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், நான் நானாக முன்வந்து (ஜூன் 18, 2014 அன்று) ஜெனீவாவுக்குச் சென்றேன். இருநூறு ஆண்டுகால பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நமது நீதித்துறையின் இந்த இழிவான மற்றும் இழிவான அறிக்கையை அந்த அமர்வில் வன்மையாகக் கண்டித்தேன்.

எட்டு நாள் இலங்கை விஜயத்தின் பின்னர், எமது நீதித்துறை திறமையற்ற, தவறாகத் தெரிவு செய்யப்பட்ட, ஊழல்வாதிகள் மற்றும் பக்கச்சார்பான நீதிபதிகளால் ஆனது என்று மொனிகா பின்டோ கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது என நான் ஜெனிவாவில் கேள்வி எழுப்பினேன்.

இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அறிக்கை என்று கூறி தேவைப்பட்டால் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்குக் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நமது நீதிபதிகளின் தொழில் தகுதி மற்றும் முன்னேற்றம் குறித்து ஆராயுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

அப்படித்தான் அன்று எங்கள் நீதிமன்றத்தின் மானத்தைக் காப்பாற்றினேன். ஆனால் தற்போது நீங்களும் முல்லைத்தீவில் தற்போது எனக்கு எதிராகப போராட்டம் நடத்தும் சட்டத்தரணிகளும் இந்த விடயத்தில் மெளனம் சாதிக்கிறீர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எமது பெளத்த பாரம்பரியத்தின் எச்சங்கள் எவ்வாறு குண்டர்களால் அழிக்கப்படுகின்றன என்பதை சட்டத்தரணிகள் சங்கம் வடக்குக்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பழங்கால பெளத்த எச்சங்களை இடித்து சிவலிங்கத்தை வைத்து வழிபடும் முறையை அவதானிக்குமாறும் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன். இடிபாடுகளை புனரமைக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதுடன் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் மீது பொய் வழக்குப் போட்டு, புனரமைப்புப் பணிகளை நிறுத்துமாறும் அதுவரை கட்டப்பட்டதை இடித்துத் தள்ளும் நிலையும் உள்ளது.

நாட்டில் சட்டத்தை நிறுவுவதே உங்கள் சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தால், மோதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற விடயங்களிலும் உங்கள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

நாம் அனைவரும் நீதித்துறையை மதிக்கின்றோம். ஆனால் நமது பாரம்பரியத்தை அழிக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு முன்பு வழக்கறிஞர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேசப்பற்று இருந்தால் இவற்றையும் கவனிக்க வேண்டும்.”- என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More